உன்னதமான உயிரை, மாய்த்துக்கொள்ளும் செயல்களில் இனி யாரும் ஈடுபடாதீர்கள்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார், மாணவ செல்வங்களுக்கு அன்பு வேண்டுகோள்
சென்னை
அம்மா அரசால் உருவாக்கப்பட்ட நீட் தேர்வு பயிற்சி மையங்கள் விடியா தி.மு.க. அரசில் முறையாக செயல்படுத்தப்படாததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததோடு, தற்கொலை சம்பவங்களும் அதிகரிப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என்று கூறியுள்ள கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நமக்கு கிடைத்துள்ள அற்புதமான, உன்னதமான உயிரை, மாய்த்துக்கொள்ளும் செயல்களில் இனி யாரும் ஈடுபடக்கூடாது என்று மாணவ செல்வங்களிடம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆவடி தொகுதி திருமுல்லைவாயில் சோழம்பேடு இளங்கோ நகர் 2-வது தெருவை சேர்ந்த லக்ஷனா ஸ்வேதா. இவர் ஆன்லைன் மூலமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்று வந்த நிலையில் கடந்த 17ம்தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வை எழுதியுள்ளார்.
இந்நிலையில் தேர்வு முடிவு வெளியானது. இதில் அவர் தோல்வியடைந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வீட்டில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அம்மாவின் ஆட்சியிலும், அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியிலும், நீட்டை ஒழிக்க சட்டப்போராட்டம் நடத்தப்பட்டது. அதே நேரத்தில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், திறமையையும் வளர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் நீட் பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டன.
விடியா திமுக ஆட்சி அமைந்த பின்னர் இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்பட்டது. அம்மா அரசால் உருவாக்கப்பட்ட பயிற்சி மையங்கள் முறையாக செயல்படுத்தப்படாததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததோடு, தற்கொலை சம்பவங்களும் அதிகரிப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’’ என்று அவ்வை மூதாட்டி கூறினார். மாணவச்செல்வங்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த உன்னத வாழ்வை, நம்மை ஈன்ற பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும்,
நாட்டிற்கும் பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, நமக்கு கிடைத்துள்ள அற்புதமான, உன்னதமான உயிரை, மாய்த்துக்கொள்ளும் செயல்களில் இனி யாரும் ஈடுபடக்கூடாது என்று மாணவ செல்வங்களிடம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கல்வி என்பது நம் எதிர்கால வாழ்க்கைக்கான திறவுகோல். குறிப்பிட்ட படிப்பு தான் நம் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்ற எண்ணத்தை மாணவச்செல்வங்கள் கைவிட வேண்டும் என்று, ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து வாஞ்சையோடு வேண்டுகோள் விடுக்கிறேன்.
விரும்பியது கிடைக்கவில்லை என்றால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, படித்து பட்டம் பெற்று முன்னேறுவோம் என்ற வைராக்கியத்தை மாணவ செல்வங்கள் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.