தற்போதைய செய்திகள்

நாங்கள் மக்களை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஸ்டாலின் அவர் வீட்டு மக்களை நினைத்துக் கொண்டிருக்கிறார் – முதலமைச்சர் கடும் தாக்கு

சென்னை

நாங்கள் மக்களை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஸ்டாலின் அவர் வீட்டு மக்களை நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: 200 சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெறும் என்று ஸ்டாலின் …

பதில்: அவர் என்ன 300 கூட வைத்துக் கொள்ளலாம். ஓட்டு போடுவது மக்கள் தானே, அதை மறந்து விட்டாரே. நாங்கள் மக்களை நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர் வீட்டு மக்களை நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர், தன் மகன் வரவேண்டுமென்று தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். நாட்டு மக்கள் வரவேண்டுமென்றெல்லாம் பாடுபடவில்லை. கலைஞர் இருக்கும் போது ஸ்டாலின் வரவேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார்.

இப்போது ஸ்டாலின், தன் மகன் உதயநிதி ஸ்டாலின் வரவேண்டுமென்று ஆசைப்படுகிறார். நாட்டு மக்களுக்கு நன்மை செய்வோம், நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களைக் கொண்டு வருவோம் என்று கடுகளவு கூட எண்ணம் கிடையாது. தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், குடும்பத்திற்கு என்னென்ன பதவி கிடைக்க வேண்டும், என்னென்ன அதிகாரத்தில் வர வேண்டுமென்று தான் இருக்கிறார்கள்.

இப்போது தமிழ்நாட்டில் கனிமொழி ஒரு பக்கம் சுற்றுகிறார். தயாநிதி மாறன் ஒரு பக்கம் சுற்றுகிறார். அந்தக் கட்சியில் வேறு ஆளே கிடையாதா? கழகத்தில் நான் பேட்டி கொடுக்கும் போது, எங்களுடைய அமைச்சரை நான் பதில் சொல்லச் சொல்கிறேன்.அவர் பதில் சொல்கிறார். திமுக-வில் இதுபோன்று சொல்ல முடியுமா? அவர் மட்டுமல்ல, கூட்டணி கட்சியினரே வாய் பேச பயந்து கொள்கிறார்கள்.

எங்கள் கூட்டணி அப்படியல்ல. ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை இருக்கின்றது. அந்தக் கொள்கையின் படி அந்தக் கட்சி நடக்கும். அப்போது தான் அந்தந்த கட்சியை வளர்க்க முடியும். அப்படி எங்கள் கட்சியிலுள்ள கூட்டணிகளெல்லாம் சுயமாக செயல்படுகிறார்கள். ஆனால், அவர் கட்சியிலுள்ள கூட்டணியெல்லாம் பயந்துபோய், அவர் என்ன சொல்கிறாரோ, அதற்கு ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.