சிறப்பு செய்திகள்

கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் – உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சியின் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதை போல் மற்ற உள்ளாட்சி அமைப்புகளும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் உத்தரவின்படி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அமைச்சர்கள் தலைமையிலும் பல்வேறு உயர் அலுவலர்களை கொண்ட சிறப்பு குழுக்கள், முழு ஊரடங்கு, வைரஸ் தொற்று கண்டறியும் பரிசோதனைகளை அதிகரித்தல், வைரஸ் தொற்று பாதித்த நபர்களை மருத்துவமனை,

கோவிட் பாதுகாப்பு மையம் மற்றும் அவர்களின் இல்லங்களில் தனிமைப்படுத்தி கண்காணித்தல், வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளி ஊர்களிலிருந்து சென்னை திரும்பியவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துதல், பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா எனக் கண்டறிய இல்லங்களுக்கே சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள 12,000 களப்பணியாளர்கள் மற்றும் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்களை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடத்தி அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு தொற்று கண்டறிதல்,

பொதுமக்களிடையே சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி அல்லது சோப்பு கரைசல் அவ்வப்பொழுது கைகளை சுத்தம் செய்ய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக சென்னையில் வைரஸ் தொற்று நாள்தோறும் படிப்படியாக குறைந்து வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக 10,000க்கும் மேல் மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கடந்த 13 நாட்களாக தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கை சராசரியாக 1,200 என்ற நிலையில் குறைந்துள்ளது. இதேபோன்று பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிதல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், தனிமைப்படுத்தும் மையங்களை அமைத்தல், பல்வேறு விளம்பரப் பணிகளின் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனும், பொதுசுகாதாரத்துறையுடனும் ஒருங்கிணைந்து செயல்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை தமிழகத்தின் பிற பகுதிகளில் முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் அவரவர் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விரிவாக கேட்டறிந்தார். பணிகள் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை அதற்கான காலக்கெடுவிற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், செயல்படுத்தப்பட வேண்டிய திட்டப்பணிகளுக்கு தேவையான திட்ட அறிக்கை தயாரித்தல், ஒப்பந்தப்புள்ளி கோருதல், விதிமுறைகளுக்குட்பட்டு ஒப்பந்தங்களை இறுதி செய்து பணிகளை துவங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

தற்பொழுது, பருவமழை துவங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு துளி மழைநீரையும் வீணாக்காமல் சேகரிக்கும் வகையில் அனைத்து இல்லங்கள் மற்றும் அரசு கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் மழைநீர் எளிதில் செல்லும் வகையில் உள்ளனவா எனவும், அடைப்புகள் இருந்தால் அவற்றை சரிசெய்ய உடனடியாக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சரியான முறையில் பயன்பாட்டில் உள்ளனவா எனவும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 210 நீர்நிலைகள் கண்டறியப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பணிகள் முடிவுற்ற நீர்நிலைகள் தொடர்ந்து நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மற்ற மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 585 ஏரி, குளம், குட்டைகள், பேரூராட்சிகளில் உள்ள 2,366 ஏரி, குளம், குட்டைகள், கிராம ஊராட்சிகளில் உள்ள 68,173 ஏரி, குளம்,

குட்டைகள் போன்ற நீராதாரங்களில் கடந்த ஆண்டு முதலே பராமரிப்பு பணிகள், கரைகளை சீரமைக்கும் பணிகள், தூர்வாரும் பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகாமல் சேகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பான விவரங்களை 15 நாட்களுக்குள் அறிக்கையாக தலைமையிடத்திற்கு தெரிவிக்க வேண்டுமென அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.