சிறப்பு செய்திகள்

11-ந்தேதிக்கு ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு -கழக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

சென்னை

மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் டிசம்பர் 9-ந்தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை உடனடியாக குறைக்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகளை வழங்கவும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்கவும், பொங்கல் விழாவை கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகை அளிக்கவும், அம்மா மினி கிளினிக்குகளை மூடுவதை கண்டித்தும், அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்கவும், தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தியும் இப்போராட்டம் நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்போராட்டம் 11-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஒப்புதலோடு தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 9.12.2021 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்ற 11.12.2021 அன்று காலை 11 மணியளவில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு தலைமை கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.