தற்போதைய செய்திகள்

கொரோனாவை விரட்டியடிக்கும் மகா சக்தியாக முதல்வர் திகழ்கிறார் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி

தமிழகத்தில் கொரோனா தொற்று நோயை விரட்டி அடிக்கும் மகா சக்தியாக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் கோவில்பட்டி வட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 1025 குடும்பங்களுக்கு வருவாய்த்துறை ஏற்பாட்டில் தன்னார்வலர்கள் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு சென்று தலா 5 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கும் பணியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, எட்டையாபுரம் வட்டம் இளம்புவனம்‌ ஊராட்சி பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட 702 குடும்பங்களுக்கும் அதேபோல் கோவில்பட்டி வட்டம் பாண்டவர் மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகரின் 323 தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் என மொத்தம் தனிமைபடுத்தப்பட்ட 1025 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கும் பணியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொரோனா வைரஸ் என்னும் கொடிய தொற்று நோயினால் தமிழகத்தில் உள்ள மக்களின் ஒரு உயிரை கூட நான் இழக்க சம்மதிக்க மாட்டேன் என்று கூறி கொரோனா வைரஸ் என்னும் தொற்றுநோயை தடுக்க மருத்துவத்துறை உட்பட ‌பல்வேறு துறைகள் மூலம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் சுய ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களும் உடன் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று நோயிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற மருத்துவத்துறை உட்பட பல்வேறு துறைகள் மூலம் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருவதன் காரணமாக தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றுநோயை விரட்டி அடிக்கும் மகா சக்தியாக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் நமது மாவட்டத்திலும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்‌ வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் நேரடியாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஏற்கனவே நமது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சி, காயல்பட்டணம் நகராட்சி, 19 பேரூராட்சிகள் மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் பணி புரியும் 5000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர் களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அதேபோல் இன்று எட்டையாபுரம் வட்டம் இளம்புவனம் ஊராட்சி பகுதியில் உள்ள 702 குடும்பங்களுக்கும் கோவில்பட்டி வட்டம் பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ்நகர் பகுதியிலுள்ள 323 குடும்பம் என மொத்தம் 1025 தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் வழங்குவதற்கு ஏதுவாக தன்னார்வலர்கள் மூலம் வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் 14 நாட்கள் தங்களது வீட்டில் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் என்னும் தொற்றுநோய் பரவாமல் இருக்க முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். மேலும் கைகழுவும் முறையினை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மக்கள் அனைவரும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

மேலும் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகை தரும் நபர்களை தீவிரமாக கண்காணித்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரிசோதனையை கண்டிப்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கழக இலக்கிய அணி இணைச்செயலாளரும், விளாத்திக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான போ.சின்னப்பன், மாவட்ட இந்து அறநிலையத்துறை தலைவர் பி.மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் தனபதி, தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் அன்புராஜ், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பழனிசாமி, கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், கோவில்பட்டி அம்மா பேரவை செயலாளர் ராமர், மாவட்ட ஆவின் பால் இயக்குநர் நீலகண்டன், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், தூத்துக்குடி மாநகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பி.ஜெகதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.