தற்போதைய செய்திகள்

கூட்டுப்பண்ணை குழுக்களுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

ஆரணியில் 10 விவசாய கூட்டுப்பண்ணை குழுக்களுக்கு 50 லட்சம் ரூபாய் மானியத்தில் வேளாண் பண்ணைக்கருவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியம் மேற்கு ஆரணி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள 10 விவசாய உற்பத்தியாளர்கள் கூட்டுப்பண்ணை குழுக்களுக்கு 50 லட்சம் ரூபாய் மான்யத்தில் வேளாண் பண்ணைக்கருவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தலைமை தாங்கினார். செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார். வந்திருந்த அனைவரையும் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முருகன் வரவேற்றார்.

இதில் வேளாண் உற்பத்தி குழுக்களுக்கு பண்ணைக்கருவிகளை வழங்கி அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது;-

வேலப்பாடி, பனையூர், சேவூர், மொரப்பந்தாங்கல், மட்டதாரி, நாச்சாபுரம், அரையாளம், புங்கம்பாடி, குண்ணத்தூர், கொளத்தூர்பகுதிகளை சேர்ந்த 10 விவசாய பண்ணைக்குழுக்களுக்கு பவர்டில்லர் 26-ம், சுழற்கலப்பை 10-ம், வைகோல் கட்டும் கருவி 1-ம், விதை விதைக்கும் கருவி 3-ம் உள்ளிட்ட வேளாண் பண்ணைக்கருவிகள் வழங்கப்படுகிறது.

இதன் மதிப்பு மொத்தம் 58 லட்சத்து 17 ஆயிரத்து 24 ரூபாயாகும் இதில் 50 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள 8 லட்சத்து 17 ஆயிரத்து 24 ரூபாய் மட்டும் விவசாய பண்ணைக்குழுக்கள் செலுத்தலாம். மேற்கண்ட விவசாய உபகரணங்களால் ஆரணி ஒன்றியம், மேற்கு ஆரணி ஒன்றியப் பகுதியை சேர்ந்த 1000 விவசாயிகள் பயணடையவுள்ளனர்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 83 விவசாயிகள் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 4.15 கோடி மூலதன நிதி வழங்கப்பட்டு அவற்றின் மூலம் மொத்தம் 352 எண்கள் வேளாண் பண்ணை கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட பண்ணை கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட பண்ணை கருவிகள், 12 டிராக்டர்கள், 10 விதைப்பு கருவிகள், 59 சுழற்கலப்பை, 110 பவர் டில்லர்கள், 124 களை எடுக்கும் கருவிகள், 24 நெல் நடவு இயந்திரங்கள், 7 இயந்திர கலப்பைகள், ஒரு கதிரடிக்கும் கருவி, நான்கு வைக்கோல் கட்டும் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தியாகராஜன், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர்கள் செல்வராசன், சந்திரன், அரசு வழக்கறிஞர் க.சங்கர், நகர செயலாளார் எ.அசோக்குமார், ஒன்றிய செயலாளார்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, பாசறை மாவட்ட செயலாளார் ஜி.வி.கஜேந்திரன். மாவட்ட கவுன்சிலர் அ.கோவிந்தராசன், மேற்கு ஆரணி ஒன்றியகுழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், துணைத்தலைவர் அ.வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.