தற்போதைய செய்திகள்

முதலமைச்சரின் மகத்தான நடவடிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டி – வி.வி.ராஜன்செல்லப்பா பெருமிதம்

மதுரை

முதலமைச்சரின் மகத்தான நடவடிக்கைகள் எல்லாம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது என்று மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பெருமிதத்தோடு கூறினார்

கடந்த 60 நாட்களுக்கு மேலாக நோய்த்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த தடை காலத்தில் முதலமைச்சர் பல்வேறு நிவாரண தொகுப்புகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். கழகத்தின் சார்பிலும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள் எளிய மக்களுக்கு நிவாரண தொகை வழங்கி வருகிறார்கள்.

இதனைத்தொடர்ந்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்பாட்டில் தொடர்ந்து மேலூர், கிழக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதனைத்தொடர்ந்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றத்தில் உள்ள 2,500 குடும்பத்திற்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட சமையல் தொகுப்புகளை மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பகுதி கழக செயலாளர் பகுதி இலக்கிய அணி செயலாளர் மோகன் தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசியதாவது;-

உலகில் 210 நாடுகளில் இந்தக் கொரோனா நோயால் 48 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.இதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர்.இந்த நோயின் தாக்கத்தை முன்கூட்டியே உணர்ந்த நமது முதலமைச்சர், ஜனவரி மாதம் முதல் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், தமிழகத்தில் நோய் தாக்கம் குறைவாக உள்ளது.

மட்டுமல்லாது. இந்தியாவிலேயே இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டு அதிகமான குணமடைந்த பட்டியலில் நமது தமிழகம் முதலிடத்தில் உள்ளது.கடந்த 60 நாட்களுக்கும் மேலாக, இந்த ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் கிடைக்க செய்வது மட்டுமல்லாது ரூ.3280 கோடி மதிப்பில், மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவியை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

இந்தியாவில் இது போன்று எந்த மாநிலத்திலும்வழங்கியது கிடையாது. கழகத்தின் சார்பிலும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க இதுவரை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் 50,000 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றைக்கு ஸ்டாலின் மக்களை திசை திருப்பும் வண்ணம் ஒன்றிணைவோம் என்ற வா என்ற பெயரில் வீட்டிலிருந்தபடியே நாடகத்தை அரங்கேற்றினார். ஆனால் அவரால் செய்ய முடியவில்லை ஏனென்றால் அவர் மக்களுக்காக செய்யவில்லை. இந்த அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் தன்னை அரசியலில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாம் காணாமல் போய்விடுவோம் என்ற காரணத்தினால் செய்தார்.

ஸ்டாலினின் எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இன்றைக்கு எட்டரை கோடி மக்களின் நன்மதிப்பைப் பெற்ற முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி திகழ்கிறார். அதுமட்டுமல்லாது முதலமைச்சர் எடுத்து வரும் சீரிய நடவடிக்கையால் நோய் பரவல் குறைந்துள்ளது. இன்றைக்கு 25 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார். இதன்மூலம் இன்றைக்கு நமது முதலமைச்சர் நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இது இருக்கிறது.

திருப்பதியில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதை போல் கோவில் நகரமாம் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் கோவில் போன்ற புகழ் பெற்ற கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான தளர்வுகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்து பின் அறிவிப்பார். 4ம் கட்ட ஊரடங்கு காலமான மே 31ம்தேதி வரையிலும் அம்மா உணவகங்களில் இலவச உணவு பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் நடவடிக்கைகளை மத்திய குடும்ப நல சுகாதார அமைச்சகம் பாராட்டியுள்ளது. முதலமைச்சரின் மகத்தான நடவடிக்கைகளை இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றி வருகிறது.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்..