தற்போதைய செய்திகள்

நம்ம சென்னை கொரோனா தடுப்பு திட்டம் – அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

சென்னை

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ராயபுரம் மண்டலத்தில் நம்ம சென்னை கொரோனா தடுப்புத் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தர்.

முதலமைச்சர் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க நுண்அளவில் (Micro Level) கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் ஏற்கனவே பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பகுதிவாரி திட்டமிடப்பட்டு வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்பொழுது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்களை கொண்டு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் நம்ம சென்னை கொரோனா தடுப்புத் திட்டத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று ராயபுரம் மண்டலம், வார்டு-56, பி.ஆர்.என். தோட்டப் பகுதியில் துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:-

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அடுத்தக்கட்ட நடவடிக்கையாக வைரஸ் பாதித்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நம்ம சென்னை கொரோனா தடுப்புத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 500 சுகாதார ஆய்வாளர்கள் வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இதில் முதற்கட்டமாக 165 சுகாதார ஆய்வாளர்கள் இராயபுரம் மண்டலத்தில் பணிகளை துவங்கியுள்ளனர்.

இவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வைரஸ் தொற்று இருப்பின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும், அவர்களோடு தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்வார்கள்.

முதலமைச்சர் பொதுமக்களின் பகுதிகளுக்கே சென்று நுரையீரல் சம்பந்தமாக பரிசோதனை மேற்கொள்ள 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை துவக்கி வைத்துள்ளார்கள். இந்த நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை கொண்டு எவ்வித அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர்களின் இடத்திற்கே சென்று எக்ஸ்ரே எடுக்கப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 167 வார்டுகளில் 10க்கும் குறைவான நபர்களுக்கே வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 33 வார்டுகளில் மட்டுமே பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது.

எனவே, இந்தப் பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பொதுசுகாதாரத்துறையின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு நுண்அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சென்னையில் மட்டும் சுமார் 85 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கவும் நவீன ரோபோ ஆட்டோவை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும், வருவாய் நிர்வாக ஆணையாளருமான டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஆணையாளர் கோ.பிரகாஷ், வடக்கு வட்டார துணை ஆணையாளர் பி.ஆகாஷ், மண்டல அலுவலர், செயற்பொறியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.