சிறப்பு செய்திகள்

திருவள்ளூர்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகள் – தமிழக அரசு உத்தரவு

சென்னை

கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் நோய் தடுப்புக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமை செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:-

சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவும் வகையில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து நோய்த்தொற்றை கட்டுப்படுத்தவும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வழங்கியது. தற்போதைய சூழ்நிலையை பரிசீலனை செய்து அந்த குழுவை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியோடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களையும் இணைக்க ஆணையிடப் பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தற்போது மாற்றிமைக்கப்பட்ட குழுவின் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், இம்மாவட்டங்களில் நோய்க்கட்டுப்பாடு மண்டலங்களை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சோதனை செய்து தனிமைப்படுத்தல், மேலும் நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக மூ்த்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனரும் சென்னை மாநகராட்சிக்கான சிறப்பு அதிகாரிக்கு உதவியாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களும், கொரோனா தொற்று பரவலை தடுக்க ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மண்டல வாரிய ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் மற்றும் ஒட்டுமொத்த சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடுதல் டிஜிபிக்கள் மகேஷ்குமார் அகர்வால் (வடக்கு மண்டலம்) அபாஸ்குமார் (கிழக்கு மண்டலம்) , அமரேஷ் பூஜாரி (தெற்கு மண்டலம்) அபய்குமார் சிங்(மேற்கு மண்டலம்) சிறு குறு தொழில் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார், சென்னை மாநகர தலைமையிட துணைக்கமிஷனர் விமலா, முன்னாள் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராஜசேகர் ஆகியோர் சென்னை மாநகராட்சியில் ஆற்றவேண்டிய பணிகள் குறித்து உரிய ஆய்வு செய்து மேற்கொள்வார்கள்.

மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் வருமாறு:- பிற்படுத்தப்பட்டோர் பிரிவு இயக்குனர் காமராஜ், (மண்டலம்1) ஆய்வு மற்றும் மேம்பாட்டுத்துறை கூடுதல் இயக்குனர் அமர் குஷ்வாலா, (மண்டலம்-2) டிட்கோ நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் (மண்டலம்4), டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார் (மண்டலம்-5) டி.என்.ஆர்.எஸ்.பி திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ் (மண்டலம் 6) முனியநாதன் (மண்டலம் 7) டி.என்.எஸ்.சி.பி மேலாண் இயக்குனர் கோபால சுந்தரராஜ் (மண்டலம் 8) ஊர்ப்புற இயக்குனர் சந்திரசேகர் சாகமுரி ( மண்டலம் 9),தாங்ஜிட்கோ இணை மேலாண் இயக்குனர் வினித் ( மண்டலம் 10), சமக்ரா சிஸ்காமாநில கூடுதல் இயக்குனர் வெங்கடேஷ்(மண்டலம் 11), அருங்காட்சியக ஆணையர் எம்.எஸ்.சண்முகம் (மண்டலம் – 12), மகளிர் மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குனர் சந்திரகலா ( மண்டலம் 13), கோஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் டி.என் வெங்கடேஷ் (மண்டலம்14), கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குனர் கருணாகரன் (மண்டலம்- 15).

இந்த மூன்று மாவட்ட பொறுப்பாளர்கள்

செங்கல்பட்டு மாவட்டம்- தொல்பொருள் துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், மற்றும் சிலைக்கடத்தல் தடுப்பு ஐஐி டி.எஸ்.அன்பு, ஆகியோரும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் மற்றும் ரயில்வே ஐஐி வனிதா ஆகியோரும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு டி.என்.எஸ்.இ.சி. செயலாளர் சுப்ரமணியன், கடலோர பாதுகாப்பு டிஐஐி பவானீஸ்வரி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார்.