தற்போதைய செய்திகள்

கழக அரசில் அரிசி கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

மதுரை

தி.மு.க. ஆட்சி காலத்தில் ரேசன் அரிசி கப்பல், ரயில் மூலம் கடத்தினர். கழக அரசில் தண்டனை அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை அனுப்பானடி அம்பேத்கர் நகரிலுள்ள 57-வது வார்டு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அனுப்பானடி எஸ்.பாலகுமார் தலைமை தாங்கினார். நிவாரண உதவிகளை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

தமிழகத்தில் இருக்கக்கூடிய வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு உடை அனைத்தையும் தமிழக அரசு கொடுத்து வருகிறது. ரேஷன் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு ஊதியங்களை அந்தந்த சங்கங்கள் முறையாக கொடுத்து விடும். ஊதியம் கொடுக்காத சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் தனித்து இருக்க வேண்டும், இந்த நோய்க்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் தமிழகத்தை போல் எந்த ஒரு அரசாங்கமும் நலத்திட்ட உதவிகளை அதிகமாக செய்யவில்லை.

வருகிற மாதம் வரை ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மருத்துவ பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். சமூகபரவல் இல்லாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு முக கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் பலசரக்கு கடை கிடையாது எந்த பொருள் வேண்டுமோ, அதை முன்கூட்டியே மக்கள் ரேஷன் கடை பணியாளர்களிடம் எடுத்துக்கூறி பின்பு வந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

பிராமணர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் தான் பச்சரிசியை ரேஷன் கடைகளில் அதிகமாக வாங்குகிறார்கள். மற்ற பகுதிகளில் வாங்குவதில்லை. ரேஷன் பொருட்கள் கடத்தல் எதுவும் இல்லை. 20 கிலோ அரிசிக்கு இரட்டிப்பு மடங்காக 40 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில மக்கள் வேறு யாரிடமாவது விற்பதற்கு முயல்கிறார்கள்.
மக்களிடம் அரிசியை வாங்குபவர்களை விஜிலன்ஸ் துறையினர் கையும் களவுமாக பிடித்து வருகிறார்கள்.

திமுக ஆட்சி காலத்தில் ரேஷன் அரிசியை கப்பல் ரயில் மூலம் கடத்தினார்கள். கழக ஆட்சிக்காலத்தில் கடத்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. தண்டனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் கடத்தல் போன்ற தவறுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு கிடையாது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.