தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 ஏரிகளில் குடிமராமத்து திட்ட பணிகள் – அமைச்சர் பா.பென்ஜமின் தகவல்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.1731.09 லட்சம் மதிப்பீட்டில் 32 ஏரிகளில் குடிமராமத்து திட்டப்பணிகள் துவங்கி நடைபெறவுள்ளது என்று அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் ஆற்பாக்கம் கிராமத்தில் ஆற்பாக்கம் ஏரியில் பொதுப்பணி (நீர்வள ஆதாரத் துறை) துறையின் சார்பில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர் வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பொன்னையா தலைமையில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் நேற்று துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் பா.பென்ஜமின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

“குடிமராமத்துப் பணி” என்பது மக்கள் தங்கள் உழைப்பு மற்றும் பொருள் பங்களிப்பு மூலம் நீர் ஆதாரங்களை சீர் செய்து நிர்வகித்தல் ஆகும். தமிழ்நாட்டில் பழங்காலத்தில் நீர்நிலைகளை புனரமைக்க அந்தந்த பாசன அமைப்பின் விவசாயிகளால் கூட்டமாக குடிமராமத்து என்ற பெயரில் சீரமைப்பு பணிகள் செய்து நீர் மேலாண்மை சிறப்பாகவும் செம்மையாகவும் பராமரிக்கப்பட்டு வந்தது. இத்திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன் 2017-ம் ஆண்டு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 13.03.2017 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், மணிமங்கலம் கிராமத்தில் மணிமங்கலம் ஏரியில் விவசாயிகள் முன்னிலையில் முதலமைச்சரால் வெற்றிகரமாக சிறப்புற குடிமராமத்துப் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த 2016-17-ம்ஆண்டில் முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ.163 லட்சம் மதிப்பில் 22 ஏரிகளில் விவசாயிகள் மூலம் தூர்வாரும் பணிகள் துவங்கி சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக, கடந்த 2017-18-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ.245 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 12 ஏரிகள் அந்தந்த விவசாய சங்கங்கள் மூலம் பணிகள் துவங்கி வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக 2019-20-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ.565 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 11 ஏரிகளில் அந்தந்த விவசாய சங்கங்கள் மூலம் பணிகள் துவங்கி வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை குடிமராமத்து பணிகள் மூலம் ரூ.973 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 45 ஏரிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் மூலம் 8287.65 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி உறுதி செய்யப் பட்டுள்ளது. வெற்றிகரமாக துவங்கி செயல்படுத்தப்பட்டுள்ள இக்குடிமராமத்து திட்டப்பணிகளில் நான்காவது கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ.1731.09 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 32 ஏரிகளில் அந்தந்த விவசாய சங்கங்கள் மூலம் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் மூலம் சுமார் 5908.12 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் ஆற்பாக்கம் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஆற்பாக்கம் ஏரியை ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் ஏரிக்கரையினை முட்செடிகள் அகற்றி பலப்படுத்துதல், மதகுகளில் பழுதுகள் நீக்குதல், கலிங்குகளில் உள்ள பழுதுகளை சீரமைத்தல் மற்றும் வரவு கால்வாயை தூர்வாரி மற்றும் அகலப்படுத்துதல் போன்ற பணிகளை பருவமழை காலத்திற்கு முன்பாக முடித்திட திட்டமிடப்பட்டு நீரினை பயன்படுத்தும் ஆர்ப்பாக்கம் ஏரி பாசன விவசாய சங்கம் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன், பொதுப்பணி நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், இளநிலைப்பொறியாளர் மார்கண்டேயன், உதவி பொறியாளர்கள் பாஸ்கரன், கோவிந்தராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள சோமசுந்தரம், காஞ்சி பன்னீர்செல்வம், ஆர்ப்பாக்கம் ஏரி சங்க தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.