தற்போதைய செய்திகள்

ஸ்டாலின் மக்களுக்கு உதவி செய்வது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார் – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

மதுரை

சுய விளம்பரத்துக்காகவே மக்களுக்கு உதவி செய்வது போன்ற மாயத்தோற்றத்தை ஸ்டாலின் ஏற்படுத்துகிறார் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை புறநகர் பகுதிகளான திருப்பாலை, அய்யர் பங்களா உள்ளிட்ட பகுதிகளில் 2,000க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வழங்கினார்.

பின்னர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை முதலமைச்சர் பல்வேறு வகையில் செய்து வருகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் அந்தந்த பகுதிகளில் கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.

இன்றைக்கு மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் அம்மாவின் அரசு செய்து வருகிறது. இதன் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அரசாக திகழ்ந்து கொண்டு வருகிறது. ஆனால் மக்கள் தன்னை மறந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சுய விளம்பரத்துக்காகவே மக்களுக்கு உதவி செய்வது போன்ற மாயத்தோற்றத்தை ஸ்டாலின் உருவாக்குகிறார்.

இந்தியாவிலேயே ஒரு முன் மாதிரியாக தமிழக முதலமைச்சரின் செயல்பாடு உள்ளது என்று இந்திய சுகாதாரத்துறை பாராட்டி உள்ளது. விரைவில் தமிழகத்தை கொரோனா இல்லாத பகுதியாக உருவாக்கி தமிழகம் பச்சை மண்டலமாக இருக்கிறது என்ற நிலையை முதலமைச்சர் உருவாக்குவார்.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி கழகச் செயலாளர் எஸ்.ஜீவானந்தம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் சண்முகப்பிரியா; வட்டக் கழக செயலாளர் முருகன், நவநீதகிருஷ்ணன், நாகராஜ், புருஷோத்தமன், உக்கிரபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.