தேனி

குடிமராமத்து திட்டத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணி – எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

தேனி

தேனி மாவட்டம், கம்பம் தொகுதிக்குட்பட்ட தேவாரம் சின்னதேவிகுளம் மற்றும் சின்னஓவுலாபுரம் பெரியஊத்து ஓடை ஆகிய கண்மாய்களில் குடிமராமத்து பணியை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டம், தேவாரத்தில் உள்ள சின்னதேவிகுளம் கண்மாய், சின்னமனூர் ஒன்றியம் சின்னஓவுலாபுரம் பெரியஊத்துஓடை கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களின் கரைகள் மழை காலங்களில் ஏற்படும் சரிவால் பலவீனமாகி உள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் கண்மாய்களின் கரைகளை பலப்படுத்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் கவனத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் கொண்டு சென்றார்.

அதனடிப்படையில் சின்னதேவிகுளம் கண்மாய் தூர்வார ரூ.32 லட்சமும், பெரிய ஊத்து ஓடை கண்மாய் தூர்வார ரூ.25 லட்சமும் ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்றுமுன்தினம் சின்னதேவிகுளம் கண்மாயிலும், நேற்று பெரிய ஊத்து ஓடை கண்மாயிலும் பூமிபூஜை செய்து தூர்வாரும் பணிகளை கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் கதிரேசன், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், தேவாரம் பேரூர் செயலாளர் சீனிவாசன், சின்னமனூர் ஒன்றிய அவைத்தலைவர் கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ் மற்றும் பூசாரிகவுண்டன்பட்டி குருசேவ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.