தற்போதைய செய்திகள்

1500 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

தருமபுரி

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் கழகத்தின் சார்பில் 1500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட செங்கல்மேடு, சோளக்கொட்டாய்,கடத்தூர் பேரூராட்சி, பொ.மல்லாபுரம் பேரூராட்சி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள், கார்,வேன் டிரைவர்கள், சலவை தொழிலாளர்கள், முடிதிருத்தம் செய்யும் தொழிலாளர்கள், மாற்று திறனாளிகள் என 1200 பேருக்கு கழகத்தின் சார்பில்சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி தலைமையில் அரிசி, கோதுமை, ரவை,பருப்பு, எண்ணெய், காய்கறிகள் அடங்கிய அத்தியாவசிய பொட்களை தருமபுரி மாவட்ட கழக செயலாளரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அம்மா அவர்களின் அரசு கொரோனா நோய் தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான் தமிழகத்தில் நோய் தொற்று அதிகமாக இல்லாமல் சிகிச்சைக்கு பின் வீடு திரும்புவோர் பட்டியலின் எண்ணிக்கை நாட்டிலேயே அதிகமாகவும், நோய் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகவும் குறைவாகவும் உள்ளது.

மேலும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுடன் மக்களின் அடிப்படை தேவைகளை மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி வேளாண் பணிகள் முழுமையாக நடைபெற்றுவருகிறது.

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உரிய நேரத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் அறிவுறுத்தல் படி நமது மாவட்ட நிர்வாகம் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாகவும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கழக அரசு மேற்கொண்டுள்ள கொரோனா நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை தருமபுரி மாவட்ட பொதுமக்கள் பின்பற்றிய காரணத்தால் நமது மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று 5 நபர்களுக்கு மட்டுமே ஏற்பட்டது.

அதுவும் அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் தற்போது ஐந்து பேரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். தருமபுரி மாவட்டம் கொரோனா நோய்தொற்று இல்லாத மாவட்ட மாகும். ஆகவே அனைவரும் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இதேபோல் தருமபுரி மாவட்ட கழக அலுவலகம், பாலகோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் பென்னாகரம், ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, ரவை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.