தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்ட செயல்பாடு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தொட்டில் குழந்தை திட்டம், பிற திட்டங்களை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், அடி அண்ணாமலை மற்றும் அத்தியந்தல் ஊராட்சிகளில் சமூக நலத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் தொட்டில் குழந்தை திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி, வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி, மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டீனா தா.டார்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் மையத்தில் உள்ள 14 குழந்தைகளுக்கு பால் பவுடரும், 6 வயது முதல் 18 வயது வரை உள்ள ஆண் குழந்தைகள், காப்பகத்தில் உள்ள 11 குழந்தைகளுக்கு ரொட்டி, பிஸ்கட் மற்றும் தின்பண்டங்கள் அமைச்சர் தனது சொந்த செலவில் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் அடிஅண்ணாமலை ஊராட்சியில் உள்ள சாந்திமலை அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் ஆய்வு மேற்கொண்டார். முகாமில் தங்கியுள்ள
40 நபர்களுக்கு ரொட்டி, பிஸ்கட், பேஸ்ட் மற்றும் பிரஷ் ஆகியவற்றை அமைச்சர் தனது சொந்த செலவில் வழங்கினார்.

மேலும் அத்தியந்தல் ஊராட்சியில் அமைந்துள்ள ஓம் சாந்தி முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் இல்லத்தில் தங்கியுள்ள 30 முதியோர்களுக்கு மெத்தை, பாய், தலையணை, போர்வை ஆகியவற்றை தனது சொந்த செலவில் வழங்கினார். அத்தியந்தல் ஊராட்சி, பெரும்பாக்கம் சாலையில் அமைந்துள்ள அலைகள் பெண் குழந்தைகள் இல்லத்திற்கு நேரில் சென்ற அமைச்சர், குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் ரொட்டி, பிஸ்கட், தின்பண்டங்கள், குடிநீர் பாட்டில் ஆகியவற்றை வழங்கினார்.