தற்போதைய செய்திகள்

266 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.2.16 கோடி கடனுதவி – அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

வேலூர்

கொரோனா ஊரடங்கு தடை காலத்தில் குடும்ப பெண்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலமாக 266 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.16 கோடி மதிப்பில் கடனுதவிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம். ஜோலார்பேட்டை ஒன்றியம் தாமலேரிமுத்தூர் தனலட்சுமி மஹாலில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக கொரோனா ஊரடங்கு தடைகாலத்தில் மகளிர் குழுக்களின் அவசர பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்திட சிறப்பு கடனுதவியாக 3717 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 16 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

முதலமைச்சரின் ஆணைப்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனா தொற்று பாதிக்காமல் பாதுகாத்திட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை மூலமாக தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதன் விளைவாக நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 29 நபர்களின் 21 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய் தொற்று நமது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எவருக்கும் ஏற்படவில்லை. வெளியில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு இருந்தது மட்டும் கண்டறியப்பட்டது.

ஊரடங்கு தடைகாலத்தில் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று பல்வேறு நிவாரண உதவிகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார். தற்போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 4-ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. தொடர்ந்து உள்ள ஊரடங்கால் பொதுமக்கள் குறிப்பாக குடும்ப
பெண்கள் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதன் அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி குறைந்த பட்சம் தனி நபருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ஒரு குழுவுக்கு ரூ.1 லட்சம் வரையில் கடனுதவிகளை மத்திய கூட்டுறவு வங்கியின் மூலமாக வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

அதனடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 266 குழுக்களுக்கு கடந்த 3 நாட்களுக்குள் ரூ.2.16 கோடி கடனுதவி மகளிர் குழு பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கடனுதவி தவணைகளை அடுத்த 6 மாதங்கள் கழித்து திரும்பி கட்டலாம் என்ற விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிரின் அவசர தேவையை பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும். சோதனையான ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிந்திடும் அரசாக முதலமைச்சரின் அரசு தொடர்ந்து உதவிகளை வழங்கி வரும் இவற்றை பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் க.ஜெயம், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் கே.பூபதி, திருப்பத்தூர் சர்க்கரை ஆலைத்தலைவர் ஏ.ஆர்.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.ரமேஷ், திருப்பதி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் தேவன், கோபி, வெள்ளையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.