தற்போதைய செய்திகள்

கொரோனா இல்லாத மாவட்டமாக கரூர் உருவாக அனைவரும் பங்களிப்பை அளிக்க வேண்டும் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்

கரூர்

அரசின் உத்தரவுகளை கடைபிடித்து கொரோனா இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ எடையுள்ள துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுக்கான பொருட்களையும்,

இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் பரிமாற்றத்திற்கு இடையூறு இல்லாத வகையில், உதடு அசைவு தெரியும் வகையிலான முகக்கவசங்களையும் கரூர் மாவட்ட கழக செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

சமூக விலகல் கடைபிடிக்கப்பட்டு அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அமரவைக்கப்பட்ட பிறகு அனைவரின் கைகளிலும் கைசுத்தம் செய்யும் திரவம் தெளிக்கப்பட்டு, முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள காரணத்தால், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆதரவற்றவர்களுக்கும், ஏழை-எளிய மக்களுக்கும் உணவுக்கான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாயவிலைக் கடைகளில் விலையில்லாமல் பொருட்கள் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள தொழிலாளர்களுக்கும், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், நல வாரியத்தில் பதிவு செய்யாத நபர்களின் நிலையினையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கும் உதவித்தொகையினை வழங்க தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் 3000 மாற்றுதிறனாளிகளுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசின் சார்பில் உணவுக்கான பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், காது கேளாத வாய்பேசமுடியாத, கண்பார்வையற்ற, கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 200 நபர்களுக்கு உணவுக்கான பொருட்கள் வழங்கப்படுகின்றது.

ஏற்கனவே, பாரத ஸ்டேட் வங்கியின் பங்களிப்புடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து சாலை ஓரங்களில் ஊதுபத்தி உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்து வரும் சுமார் 50 கண் பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு முகக்கவசம், 15 கிலோ அரிசி, தலா அரைக்கிலோ எடையுள்ள துவரம் பருப்பு, சமையல் எண்ணைய் உள்ளிட்ட பொருட்களும், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளின் மூலம் சுமார் 400 மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவுக்கான பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு தந்து, அரசின் உத்தரவுகளை கடைபிடித்து கொரோனா இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஒரு பயனாளிக்கு ரூ.56,800 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டரை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.இராஜேந்திரன், திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.ஆர்.காளியப்பபன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் வ.சந்தியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்