தற்போதைய செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.13.93 கோடியில் 132 குடிமராமத்து பணிகள் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்

திருப்பூர்

பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.13.93 கோடி மதிப்பீட்டில் 132 குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை வட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கனூத்து பகுதியில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தமிழகத்தில் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் முத்தான திட்டமான குடிமராமத்து பணிகள் 2016-2017-ம் ஆண்டு முதல் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி 2020 -2021-ம் ஆண்டிற்கு தமிழ்நாடு முழுவதும் 1387 பணிகள் ரூ.499.97 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

பொதுப்பணித்துறை – நீர்வள ஆதாரத்துறை மூலம் பதிவு பெற்ற பாசன சங்கங்கள் (அல்லது) நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் (அல்லது) பாசனதாரர்கள் தொகுப்பு வாயிலாக பணிகளை செயல்படுத்திட அரசு உரிய வழிமுறைகள் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தில் கால்வாயில் வளர்ந்துள்ள செடிகொடிகள் முட்புதர்களை அகற்றுதல், கால்வாயினை தூர்வாரி சுத்தம் செய்தல். கால்வாயில் சேதமடைந்துள்ள குறுக்கு கட்டங்களை பழுது பார்த்தல், பழுதடைந்த மடைகளை சீரமைத்தல், பழுதடைந்த ஷட்டர்களை புதுப்பித்தல், கால்வாய் கரைகளை பலப்படுத்துதல். குளங்களின் கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி நமது மாவட்டத்தில் ஆழியாறு வடிநிலக் கோட்டத்தின் வாயிலாக 54 பணிகள் ரூ.501.80 லட்சங்களிலும், திருமூர்த்தி கோட்டத்தின் வாயிலாக 45 பணிகள் ரூ.447.94 லட்சங்களிலும், பவானி வடிநிலக்கோட்டத்தின் வாயிலாக 6 பணிகள் ரூ.88.10 லட்சத்திலும், பழனி குதிரையாறு வடிநில கோட்டத்தின் வாயிலாக 1 பணி ரூ.25 லட்சத்திலும், அமராவதி வடிநிலக் கோட்டத்தின் வாயிலாக 26 பணிகள் ரூ.330.41 லட்சத்திலும் என மொத்தம் நடப்பாண்டில் 132 பணிகள் ரூ.13.93 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், காங்கயம்ஆகிய வட்டங்களில் உள்ள சுமார் 1,29,336.559 ஹெக்டர் பாசன நிலங்கள் பயன்பெற உள்ளன. மேற்காண் குடிமராமத்துப் பணிகளை விவசாய பெருங்குடி மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும்.

மேலும், முதலமைச்சர் நமது மாவட்டத்திற்கு மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி தந்து வருகிறார். அதன்படி, 2020-2021-ம் ஆண்டிற்கு நமது மாவட்டத்தில், சுமார் 178.60 கோடி மதிப்பிலான பாசனத்திட்டத்திற்கு நிதியினையும் ஒதுக்கி தந்துள்ளார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. அரசு அளிக்கின்ற அனைத்து திட்டங்களையும் வேளாண் பெருங்குடி மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.