சிறப்பு செய்திகள்

செலவினங்களை குறைக்க தமிழக அரசு முடிவு – பரிசுப் பொருட்கள், நினைவுப்பொருள்கள் கிடையாது

சென்னை

அதிகாரிகளின் தினப்படி 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. பரிசுப் பொருட்கள், நினைவுப்பொருட்கள் வாங்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களை ஈடுசெய்யும் வகையில் அரசின் பல்வேறு செலவுகளை குறைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரசுத் துறைகளின் பல்வேறு செலவினங்களுக்கான அந்தந்த துறைகளின் மானியக் கோரிக்கைகளில் தேவையான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நடப்பாண்டில் மானியக் கோரிக்கைகளில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகள் குறைக்கப்படுகின்றன. இதன்படி அரசுத் துறைகளில் வழக்கமான செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில் 20 சதவீதம் குறைக்கப்படுகிறது. இருக்கைகள், மேஜைகள் உள்ளிட்ட தளவாடச் சாமான்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில் 50 சதவீதம் மட்டுமே செலவிடப்படும். சில விதிவிலக்கான பணிகளுக்கு மட்டுமே நிதிகள் ஒதுக்கப்படும். பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கான விளம்பரங்கள் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது.

அரசுத் துறைகளின் கணக்குகள் மூலமே அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் வழியாக வழங்கப்படும் மதிய, இரவு உணவுகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதிகளில் 50 சதவீதம் மட்டுமே செலவிடப்படும். இயந்திரங்கள், கருவிகள் ஆகியவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, மீட்புப்பணிகள் துறை ஆகியவற்றுக்கு மட்டுமே வாங்கி வழங்கப்படும். இதற்கென ஒதுக்கப்பட்ட மொத்த நிதிகளில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது.

மருத்துவம், அவசர கால ஊர்திகள், காவல் மற்றும் தீயணைப்பு சேவைகள், பாதுகாப்பு போன்ற துறைகளுக்கு மட்டுமே புதிய வாகனங்கள் வழங்கப்படும். பிற துறைகளுக்கு புதிய வாகனங்கள் வாங்க அனுமதி இல்லை. இதற்கென ஒதுக்கப்பட்ட நிதிகளில் 50 சதவீதம் குறைக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக அரசு பயிற்சிக்கான நடைமுறைகளில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. பணியில் புதிதாக சேருவோருக்கான அடிப்படை பயிற்சி, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்த பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வெளிநாட்டுகளில் சென்று பயிற்சி பெறுவதற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளில் 50 சதவீதம் மட்டுமே செலவிடப்படும்.

பல்வேறு ஆவணங்கள், அரசு உத்தரவுகளுக்கான அச்சிடும் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் பழைய கணிணிகளை மட்டும் மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. புதிதாக கணினிகளும், இதர கருவிகளும் வாங்குவதற்கு அனுமதியில்லை. இதற்காக ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்த நிதியில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது.

அரசு அதிகாரிகள், அலுவலர்களின் பயணங்கள் அலுவலக ரீதியாகவே இருக்கவேண்டும். வழக்கமான ஆய்வுக் கூட்டங்கள் காணொலி வழியாகவே நடத்தப்பட வேண்டும். அரசு செலவில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள அனுமதியில்லை.

தமிழகத்துக்குள் கூடுதலான கட்டணத்துடன் விமானப் பயணங்களுக்கு அனுமதியில்லை. விமானக் கட்டணம் குறைவாக இருந்தாலோ அல்லது ரயில் பயணத்துக்கு சமமான அளவில் கட்டணம் இருந்து அது சம்பந்தப்பட்ட ஊழியரின் அனுமதிக்கப்பட்ட பயணச் செலவுக்கு இணையாக இருந்தால் மட்டுமே பயணத்துக்கு அனுமதிக்கப்படும்.

புதுடெல்லியில் நடைபெறும் கூட்டங்களில் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தின் உறைவிட ஆணையாளர்கள் பங்கேற்க வேண்டும். எந்தவகை ஊதிய விகிதத்தைக் கொண்ட அரசு உயரதிகாரிக்கும் விமானப்பயணத்தில் உயர் வகுப்புக்கு அனுமதியில்லை. தினசரி படிகளில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. நடப்பாண்டில் பொதுவான பணியிட மாறுதல்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

பணியிட மாறுதல்கள் நிர்வாக ரீதியிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இருதரப்பு விருப்ப மாறுதல்களை அனுமதிக்கலாம்.  கொரோனா காரணமாக பயணங்களைக் குறைத்திடும் வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப்படும் விடுப்பு பயணச் சலுகை திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.

பரிசுப் பொருள்கள் வழங்குவது, பூங்கொத்துகள், சால்வைகள், நினைவுப்பரிசுகள், உள்ளிட்ட இதர பொருள்களை வாங்கத் தடை விதிக்கப்படுகிறது. 20 நபர்களுக்கு மேலாக கூட்டங்கள், கருத்தரங்குகள், நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக் கூட்டங்களை நடத்த மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது. அலுவல் ரீதியான மதிய விருந்து, இரவு விருந்துகளை மறு உத்தரவு வரும் வரை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் தெரிவித்துள்ளார்.