தற்போதைய செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை -அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

திருப்பூர்

உடுமலைப்பேட்டையில் 2-வது நாளாக நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம், பழனி சாலை, உடுமலைப்பேட்டை ஜி.வி.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அனைத்துத்துறைகளிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழக அரசு படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற பணிகளை தனியார் துறையின் மூலம் பெற்று தர ஏதுவாக அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட வேலை வாய்ப்புத்துறை மூலம் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.
அதன்மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து பயன்பெறும் விதமாக இத்திட்டம் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த முகாமில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 200க்கும் மேற்ப்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு ஏற்ற பணியாளர்களை தேர்ந்தெடுத்ததன் அடிப்படையில் இரண்டு நாட்களில் 4050 நபர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களில் நடைபெற்ற முகாமில் சுமார் 10150க்கும் மேற்பட்ட நபர்கள் நேர்காணலுக்கு வந்துள்ளார்கள். மேலும் படித்த இளைஞர்கள் அதிகளவில் பங்கு கொண்டு தங்கள் தகுதிக்கேற்ற பணியினை தேர்வு செய்ய முன்வர வேண்டும். மேலும், படித்த இளைஞர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற பணியினை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு தங்களது முழு திறமையையும் நிரூபிப்பதுடன் அத்துறையில் சிறந்து விளங்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

முன்னதாக, மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 16 நபர்களுக்கு ரூ.1,96,69,000 மதிப்பீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கான மானிய உதவியுடன் கூடிய வங்கிக் கடனுதவியையும், மகளிர்த் திட்டத்தின் சார்பில் பல்வேறு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களையும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.