தற்போதைய செய்திகள்

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் ஏரியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள்

பெரம்பலூர் 

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டம், செங்குணம் கிராமத்திற்குட்பட்ட செங்குணம் ஏரியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.இராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:- 

முதலமைச்சர் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகளில் சீரமைக்கும் பணிகள் விவசாயிகளின் பங்களிப்புடன் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும், அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையில், திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் மூலமாக 14 பணிகள் மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்காக ரூ.3.58 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்க்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 10 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பு அதாவது உடல் உழைப்பு, பொருட்களின் விலை அளித்தல், சங்கத்திலிருந்து தொகையாக வழங்குதல் என்றும், மீதமுள்ள 90 சதவீதம் அரசின் பங்களிப்பாக வழங்கப்படும். இப்பணிகள் அனைத்தும் பாசனதாரர்கள் சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும். நடப்பாண்டில் இத்திட்டத்தின் கீழ் மருதையாறு அணைக்கட்டு ரூ. 20 லட்சத்திலும், பேரையூர் ஏரி ரூ.29 லட்சத்திலும்,

அய்யலூர் ஏரி ரூ.22 லட்சத்திலும், குரும்பலூர் அணைக்கட்டு ரூ.25 லட்சத்திலும், தழுதாழை பெரிய அணைக்கட்டு ரூ.30 லட்சத்திலும், களரம்பட்டி ஏரி ரூ.20 லட்சத்திலும், வடக்கலூர் ஏரி ரூ.30 லட்சத்திலும், லாடபுரம் சிறிய ஏரி ரூ.30 லட்சத்திலும், அன்னமங்கலம் ஏரி ரூ.25 லட்சத்திலும், திருவாளந்துறை ஏரி ரூ.22 லட்சத்திலும், கீரவாடி ஏரி ரூ.25 லட்சத்திலும், செங்குணம் ஏரி ரூ.26 லட்சத்திலும், பெரம்பலூர் மேல ஏரி ரூ.25 லட்சத்திலும், கீழப்புலியூர் ஏரி ரூ.29 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.358 லட்சம் மதிப்பீட்டில் 14 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இப்பணிகளை மேற்கொள்வதன் மூலம் நீர் வீணாகாமல் முழுக்கொள்ளளவு 189.74 மில்லியன் கனஅடி நீர் தேக்குவதுடன் மூலம் 1207.13 ஹெக்டேர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதன் மூலம் குடிநீர் வசதி பெறுவதுடன் பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளித்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பொது செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் (மருதையாறு உபகோட்டம்) பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திராகண்ணுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.