தற்போதைய செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையை முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கும் போது தமிழக அரசின் ஒப்புதலின்றி மாற்றம் செய்யக்கூடாது- அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வலியுறுத்தல்

சென்னை

மேற்கு தொடர்ச்சி மலையை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கும் போது தமிழக அரசின் ஒப்புதலின்றி மாற்றங்கள் செய்யக்கூடாது என்று மத்திய அமைச்சரிடம், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அறிவுறுத்தி உள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிப்பு செய்யும் பணி முன்னேற்றம் குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜவ்டேகர் காணொளிக்காட்சி (வீடியோ கான்ப்ரன்சிங்) மூலம் மேற்கொள்ளப்பட்டது.

மேற்குத்தொடர்ச்சி மலை பரவியுள்ள மாநிலங்களான குஜராத், மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்களின் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நடந்தது. தமிழ்நாட்டின் சார்பாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர் முனைவர் பி.துரைராஜ், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர் சி.யுவராஜ், வனத்துறை சிறப்புச்செயலாளர் தீபக் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கண்டறியப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் மட்டுமே மத்திய அரசால் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சரிடம் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி மாற்றங்கள் எதுவும் செய்யாதிருக்குமாறு வனத்துறை அமைச்சர் மத்திய அமைச்சரை கேட்டுக்கொண்டார்.