தற்போதைய செய்திகள்

192 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5.05 கோடி கடன் உதவி – அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

தருமபுரி

192 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.5.05 கோடி கடன் உதவியை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி தருமபுரி மற்றும் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 192 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5.05 கோடி மதிப்பில் சிறப்பு கடன் உதவிகளையும், 91 பெண்களுக்கு அம்மா இருச்சக்கர வாகனங்கள் வாங்கிட ஆணைகளையும் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

பொதுமக்கள் ஒத்துழைப்போடு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் பொதுமக்கள் சிறப்பான ஒத்துழைப்பு வழங்கியதால் தருமபுரி மாவட்டத்தில் அதிகளவில் கொரோனா பாதிப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து தர்மபுரி திரும்பியவர்களை தனிமைப்படுத்தி, அவர்களை தொடர்ந்து கண்காணித்த காரணத்தினால் அவர்களிடமிருந்து எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தருமபுரி மாவட்டத்தில் பாதிப்பு இல்லை என்ற எண்ணத்தில் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பாமல், எப்போது வேண்டுமானாலும் கொரோனா தாக்கும் என்பதை உணர்ந்து, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பொருளாதாரத்தில் நலிவுற்ற அனைவரும் வாழ்வில் உயர வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு நல வாரியங்கள் மூலம் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் அதன் உறுப்பினர்கள் 1.65 லட்சம் பேருக்கு தலா ரூபாய் 2000, மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு வழங்கும் சிறப்பு கடனுதவிகளை பெறும் தாய்மார்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், தருமபுரி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் பூக்கடை பெ.ரவி, தருமபுரி கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் பொன்னுவேல், ஒன்றியக்குழு தலைவர்கள் நீலாபுரம் செல்வம், சாந்தி பெரியண்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், உதவி திட்ட அலுவலர்கள் கணேசன், ராஜிவ்காந்தி, காமராஜ், சிவக்குமார், வட்டாட்சியர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, வடிவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.