தூத்துக்குடி

நாம்தமிழர் கட்சி பிரமுகரை கைது செய்யக்கோரி மறியல் – கழக எம்.எல்.ஏ சின்னப்பன் தலையீட்டால் பொதுமக்கள் கலைந்தனர்

தூத்துக்குடி

வீரபாண்டிய கட்டபொம்மனை அவதூறாக பேஸ்புக்கில் செய்தி பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகரை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போ.சின்னப்பன் எம்.எல்.ஏ பேச்சுவார்த்தை நடத்தி அவதூறு பரப்பியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதால் மறியல் கைவிடப்பட்டது

சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின், புகழை கெடுக்கும் விதத்தில் பேஸ்புக் மூலம் அவதூறு செய்தி பரப்பிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பிரமுகரை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைப்பார் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன், வட்டாட்சியர் ராஜ்குமார், விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு ஜான் பீட்டர் சுரேஷ் ஆகியோருடன் நேரில் சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமாதானம் பேசி உடனடியாக சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட வைப்பார் கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் கோரிக்கையின் படி விளாத்திக்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜான்பீட்டர் சுரேஷ் உடனடி நடவடிக்கை எடுத்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் புகழை கெடுக்கும் விதத்தில் பேஸ்புக் மூலம் அவதூறு செய்தி பரப்பி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது 5 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் வழக்குபதிவு செய்து மேல் நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.

முன்னதாக மறியலில் ஈடுபட்டவர்களுடன் நடத்தி பேச்சுவார்த்தையின் போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா சுதாகர், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன், விளாத்திகுளம் மண்டல துணை வட்டாட்சியர் சரவணப்பெருமாள், வருவாய் ஆய்வாளர் பாக்யராஜ், குளத்தூர் கிராம நிர்வாக அதிகாரிகள் தென்பகுதி சிவகுருநாதன், கிழக்குபகுதி சதீஷ், வடக்குபகுதி ராஜராஜன், ராஜகம்பளத்து நாயக்கர் மகாஜன சங்க தலைவர் பால்ராஜ், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை வீரசக்கதேவி ஆலய குழுத்தலைவர் முருகபூபதி ஆகியோர் உடனிருந்தனர்.