தற்போதைய செய்திகள்

காவல்துறையினருக்கு பரிசு, பாதுகாப்பு உபகரணம் – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்

அம்பத்தூர்

ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காவல் துறையினருக்கு பரிசு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆவடி, திருநின்றவூர், திருமுல்லைவாயல், பட்டாபிராம் உள்ளிட்ட 13 காவல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் நேரில் சென்று கொரோனா போன்ற இக்கட்டான சூழல்களில் அவர்கள் ஆற்றிய பணிகளைபாராட்டி அவர்களுக்கு நினைவுப் பரிசும் மற்றும் கொரோனாவில் இருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் இருந்து இதுவரை 25 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பணியாற்றும் 10.67 லட்சம் வடமாநிலத் தொழிலாளர்களில் ஒரு லட்சத்திற்கும் குறைவானவர்களே அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

மேலும் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் தமிழகத்திற்கு வர விருப்பம் தெரிவிப்போர் அவர்கள் பயண செலவில் மத்திய அரசு செலுத்தும் 85 விழுக்காடு தொகையை தவிர மாநிலங்களே செலுத்த வேண்டிய மீதமுள்ள 15 விழுக்காடு தொகையை தமிழக அரசே செலுத்தும். இந்திய அளவில் தமிழ்நாட்டில் கொரோனா வைரசின் தாக்கம் குறைவாக இருக்க காரணம் அரசு ஊரடங்கு அறிவித்த சில மணித்துளிகளில் காவல்துறையினர் துரிதமாக தங்கள் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து பொதுமக்களை ஊரடங்கின் முக்கியத்துவத்தை பின்பற்ற செய்யுமாறு வலியுறுத்தியதன் காரணமும் ஆகும்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி மற்றும் அம்பத்தூர் காவல் துணை ஆணையர் ஈஸ்வரன், ஆவடி காவல் உதவிஆணையர் சத்தியமூர்த்தி ஆவடி நகர கழக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.