தற்போதைய செய்திகள்

ஆரணி தொகுதிக்குட்பட்ட 11 ஏரிகளில் ரூ.6.58 கோடியில் குடிமராமத்து பணிகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தகவல்

திருவண்ணாமலை

ஆரணி தொகுதியில் 11 ஏரிகளில் 6.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டப்பணிகள் நடைபெறவுள்ளது என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள அரையாளம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணிகள் துவங்கப்பட்டது இப்பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தலைமை தாங்கினார். செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்வர் பொறுப்பேற்று 4-வது ஆண்டாக குடிமராமத்துப்பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது 2020-21ம் ஆண்டிற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து குடிமராமத்துப்பணி தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்று வருகிறது இத்திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 59 ஏரிகளுக்கு 31.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆரணி தொகுதியில் 11 ஏரிகளில் 6.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறவுள்ளது.

அரையாளத்தில் 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெரிய ஏரி புனரமைப்பு செய்யும் பணி துவக்கி வைக்கப்பட்டது, இத்திட்டம் மூலம் ஏரியின் கரையை பலப்படுத்துதல். ஆழப்படுத்துதல், ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறவுள்ளது. அரையாளத்தில் குடிமராமத்து பணியால் 140 ஹெக்டேர் நிலம் பயனடைகிறது. மாவட்டம் முழுவதும் 59 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெறுவதால் 6034 ஹெக்டேர் நிலம் பயனடைகிறது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் க.சங்கர், மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மாநில விவசாய சங்க தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் எம்.வேலு, பிஆர்ஜி.சேகர், நகர செயலாளர் எ.அசோக்குமார், பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராசன், பூங்கொடி திருமால், துணைத்தலைவர் அ.வேலாயுதம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ். செயற்பொறியாளர் மகேந்திரன், தச்சூர் தலைவர் வடிவேல், உதவி செயற்பொறியாளர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.