தற்போதைய செய்திகள்

வாக்களித்த மக்களை ஏமாற்றுவதா? தி.மு.க. அரசுக்கு முன்னள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்டனம்

தூத்துக்குடி

வாக்களித்த மக்களை ஏமாற்றிய தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது தி.மு.க. பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி வெற்றிபெற்று விட்டது. ஆட்சியில் அமர்ந்து ஆறு மாதங்கள் ஆகியும்ங இதுவரை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் ஆணைக்கிணங்க 17-ந்தேதி கழகத்தின் சார்பில் தூத்துக்குடியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட கழகத்தினர் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும். தமிழகமே தூத்துக்குடியை திரும்பிப் பார்க்கும் வகையில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கழக ஆட்சியின்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.2500 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. எனவே இனி வரும் பொங்கல் திருநாளை கொண்டிடாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு உடனடியாக ரூ.2500 ரொக்கப்பரிசை தி.மு.க. அரசு வழங்க வேண்டும்.

மேலும் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டால் தான் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

இக்கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் சீனிராஜ், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், கயத்தார் ஒன்றிய செயலாளர்கள் வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி சந்தியா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் காந்தி என்ற காமாட்சி, ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் பால்ராஜ், நடராஜன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.