தற்போதைய செய்திகள்

அம்மா அரசு மீது ஸ்டாலின் கூறும் பொய் குற்றச்சாட்டு மக்களிடம் எடுபடாது – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி

ஈரோடு

அம்மா அரசின் மீது ஸ்டாலின் கூறும் பொய் குற்றச்சாட்டுகள் தமிழக மக்களிடம் எடுபடாது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். ஈரோடு புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 900 மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்பத்தினருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்மாப்பேட்டை ஒன்றிய பகுதியில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சாயப்பட்டறைகள் திறந்திருந்த போதும் , தற்போது 60 நாட்களாக சாயப்பட்டறைகள் மூடப்பட்டுள்ள போதும் கால்வாய்களில் சாயக்கழிவு நீர் கலப்பதாக தவறான தகவல்கள் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. கால்வாய்களில் சாயக்கழிவு கலப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் வலதுகரை இடது கரைப் பகுதியில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடைமடைப்பகுதிக்கும் தண்ணீர் செல்வதற்கு வசதியாக கால்வாய் சுத்தப்படுத்தும் பணி கரைகள் உயர்த்தும் பணி நடைபெற்று வருவதால் இந்தப் போகத்திற்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டு அடுத்த போகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்பது விவசாயிகளுக்கு தெரியும்.

இதுபோன்ற பணிகளால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் மீது தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதுடன் தவறான தகவல்களை தந்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்காமல் மக்களை போராட்டத்திற்கு தூண்டி வரும் வேலையை செய்து வருகிறார். ஆனால் அவரது பேச்சு மக்களிடம் எடுபடாது. அவர் பொய்யான தகவல்களை தருவதாக மக்கள் உணர்ந்து அதனை செவிமடுக்காமல் நிம்மதியாக இருக்கின்றனர். அந்தளவிற்கு அம்மாவின் அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை, சலுகைகளை வழங்கி வருகிறது. ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலம் நான்கு நாட்களில் திறந்து விடப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, ஊராட்சி தலைவர் முனியப்பன் உள்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.