தற்போதைய செய்திகள்

குடிமராமத்து திட்டப் பணிகளால் 1519 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தகவல்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தால் 1519.777 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் சிறப்பு திட்டமான குடிமராமத்து திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் பாலாறு அணை கால்வாயில் ரூ.47.60 லட்சம் மதிப்பீட்டிலும், கலையம்புதூர் அணை வரத்து கால்வாயில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட உள்ள குடிமராமத்து திட்டப்பணிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி தலைமையில் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சிறுபாசன குளங்கள், ஊரணிகள் மற்றும் குட்டைகள் சீரமைக்கும் பணிகள் விவசாயிகளின் பங்களிப்புடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும், அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையில், திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடவும், தமிழக அரசால் தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, பயனீட்டாளர்கள் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க, தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு, அதன்படி கடந்த 2 ஆண்டுகளும், அதனை தொடர்ந்து நடப்பாண்டும் தமிழகம் முழுவதும் இப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

முதலமைச்சரின் சிறப்பு திட்டமான குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடந்த 2019-20-ம் ஆண்டில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் 110 பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்துள்ளன. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக 2020-21-ஆம் ஆண்டிற்கு முதலமைச்சர் உத்தரவின்படி, குடிமராமத்து திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் பாலாறு அணை கால்வாயில் ரூ.47.60 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் 396.250 ஹெக்டேர் நிலங்களும், கொடைக்கானல் வட்டத்தில் ஏழுபள்ளம் குளத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் 214.800 ஹெக்டேர் நிலங்களும், பழனி வட்டத்தில் கலையம்புதூர் அணை வரத்து கால்வாயில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் 212.177 ஹெக்டேர் நிலங்களும், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் நங்காஞ்சியாறு நீர்த்தேக்கத் திட்டத்திற்குட்பட்ட இடது கீழ்மட்டக் கால்வாய் மற்றும் இடது மேல்மட்டக் கால்வாய்களில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் 155.080 ஹெக்டேர் நிலங்களும்,

நிலக்கோட்டை வட்டம், ஒருத்தட்டு கிராமத்திற்குட்பட்ட சிறுமலை அடிவாரத்தில் சிறுமலையாறு நீர்த்தேக்கத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் 127.780 ஹெக்டேர் நிலங்களும், நிலக்கோட்டை வட்டம், பள்ளப்பட்டி கிராமத்தில் அகரம்குளம் மற்றும் பலமாசி குளம் ஆகியவற்றில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் 97.120 ஹெக்டேர் நிலங்களும், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் கோட்டுர் ஆவாரம்பட்டி தாமரைக்குளம் குளத்திற்கான வரத்துக் கால்வாயில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் 86.940 ஹெக்டேர் நிலங்களும்,

வேடசந்தூர் வட்டத்தில் லட்சுமணம்பட்டி கிராமத்தில் லட்சுமணம்பட்டி அணைக்கட்டு மற்றும் கால்வாய் ஆகியவை ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் 77.610 ஹெக்டேர் நிலங்களும், குஜிலியம்பாறை வட்டத்தில் ராமகிரி கிராமத்தில் உள்ள ராமகிரி குளத்தில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் படுவதன் மூலம் 70.760 ஹெக்டேர் நிலங்களும், பழனி வட்டத்தில் எருமைநாயக்கன்பட்டி கிராமத்தில் பட்டைகுளத்தில் உபரி நீர் மதகு மற்றும் உபரி நீர் தடுப்புகள் ஆகியவற்றில் ரூ.49.90 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்ப டுவதன் மூலம் 49.210 ஹெக்டேர் நிலங்களும், நிலக்கோட்டை வட்டத்தில் சேவுகம்பட்டி கிராமத்தில் பெருமாள்கோவில் அணைக்கட்டு பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுதன் மூலம் 32.050 ஹெக்டேர் நிலங்களும் பாசன வசதி பெறும். மொத்தம் 11 பணிகள் ரூ.5.55 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுவதன் மூலம் 1519.777 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் பாலாறு அணை கால்வாயில் ரூ.47.60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மற்றும் கலையம்புதூர் அணை வரத்து கால்வாயில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் பலப்படுத்தும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு, பணிகள் நடைபெறவுள்ளன. இதன் மூலம் 608.427 எக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளித்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வி.மருதராஜ், ஆவின் பால்வளத்தலைவர் ஏ.டி.செல்லச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வேணுகோபாலு, சுப்புரத்தினம், குப்புசாமி, செயற்பொறியாளர் கோபி, பாலசமுத்திரம் செயல் அலுவலர் சுதர்சன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.