தற்போதைய செய்திகள்

குடிமராமத்து திட்டத்தில் அணைக்கட்டுகள் தூர்வாரும் பணி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

மதுரை

குடிமராமத்து திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் அணைக்கட்டுகள் தூர்வாரும் பணியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் கவுண்டமா நதி, திருமாணிக்கம் அணைக்கட்டு, மொச்சிகுளம் அணைக்கட்டு, மந்தியூர் அணைக்கட்டு, செம்பரணி அணைக்கட்டு ஆகியவற்றில் தூர்வாரும் பணியை உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.நீதிபதி முன்னிலையில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்ததாவது:-

தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக இந்த ஊரடங்கு காலங்களிலே மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு சீரிய நடவடிக்கைளை எடுத்து வருகிறார். அதில் விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்குகின்ற வகையில் பல்வேறு முழுமையான தளர்வுகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற வகையில் பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார்.

குறிப்பாக விவசாயிகளிடத்திலே வரவேற்பை பெற்றிருக்கிற குடிமராமத்து திட்டத்தை முதலமைச்சருடைய கனவுத்திட்டமான நீர் மேலாண்மை திட்டத்தில் ஒரு புதிய புரட்சி ஏற்படுத்துகின்ற வகையில் அனைத்து நீர் நிலைகளை மேம்படுத்துகின்ற வகையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய அணைக்கட்டுக்கள், உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைக்கட்டுகள், கண்மாய்கள் இவற்றையெல்லாம் தூர்வாரி வடகிழக்கு பருவமழையினால் நமக்கு கிடைக்கின்ற 60 சதவீத மழைநீரை சேமித்து வைத்து அதன் மூலமாக நிலத்தடிநீர் உயர்வதற்கு வழிவகை செய்து, அதன் மூலமாக விவசாயமும், குடிநீரும் பற்றாக்குறையின்றி மக்களுக்கு கிடைப்பதற்கும் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக விளங்குகின்ற இந்த குடிமராமத்து திட்டம் முதன்முதலாக தமிழகத்திலே ரூ.100 கோடியிலே தொடங்கப்பட்டது.

அதை தொடர்ந்து ரூ.320 கோடியிலே இரண்டாவது திட்டம் விவசாயிகளின் பங்களிப்போடு நடைபெற்றது. மேலும் ரூ.499 கோடி மதிப்பில் மூன்றாவது கட்டமாக இந்த குடிமராமத்து திட்டத்தை தமிழகம் முழுவதும் முதலமைச்சர் இந்த ஊரடங்கு காலத்திலும் செயல்படுத்த வேண்டுமென்று அறிவித்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 1387 பொதுப்பணித்துறை கண்மாய்களை விவசாயிகள் பங்களிப்போடு குடிமராமத்து திட்டத்தில் ரூ.498.51 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உசிலம்பட்டி தொகுதியில் குண்டாறு வடிநிலக் கோட்ட ஆளுகையின் கீழ் ரூ.390 லட்சம் மதிப்பீட்டில் 2 கண்மாய்கள், வரட்டாறு மற்றும் கவுண்டமாநதி புனரமைப்பு பணிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட கரிசல்குளம் கண்மாய் ரூ.53 லட்சம் மதிப்பீட்டிலும், சீல்நாயக்கன்பட்டி கண்மாய் ரூ.27 லட்சம் மதிப்பீட்டிலும், வறட்டாறு பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டிலும், வரட்டாறு முதல் அத்திப்பட்டி வரை ரூ.55 லட்சம் மதிப்பீட்டிலும் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம், கவுண்டமாநதி மற்றும் திருமாணிக்கம் அணைக்கட்டு, மற்றும் மொச்சிக்குளம் அணைக்கட்டு புனரமைக்கும் பணி ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெறவுள்ளது.

மேற்கண்ட கவுண்டமாநதி முழுமையாக அளவீடு செய்து கரையின் இருபுறங்களிலும் எல்லைக் கற்கள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கவுண்டமாநதி மொத்த நீளம் 44,000 மீட்டர். இதில் விவசாயிகளின் கோரிக்கையின் படி 12890 மீட்டர் நீளமுள்ள கவுண்டமாநதியை தூர்வாரி மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கவுண்டமாநதி குறுக்கே கட்டப்பட்டுள்ள திருமாணிக்கம் அணைக்கட்டு, மற்றும் மொச்சிக்குளம் அணைக்கட்டு புனரமைக்கும் பணிகள் ரூ.90 லட்சங்களுக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு 10 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்புடன் பதிவுபெற்ற பாசன விவசாயிகள் சங்கம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேற்கண்ட பணிகள் செயல்படுத்தப்படுவதால், கவுண்டமாநதி பாசன பகுதிகளில் 351.3 ஹெக்டேர் பரப்பில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறும். திருமாணிக்கம் பெரிய கண்மாய், அதிகாரிபட்டி கரிசல்குளம் கண்மாய், ஆவல்சேரி கண்மாய், செம்பரணி கண்மாய், மொச்சிகுளம் கண்மாய் மற்றும் நேரடி பாசன பகுதிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றன. மழைக்காலங்களில் பெறப்படும் மழை நீர் எந்த வித விரையமுமின்றி கண்மாய்களுக்கு செல்லுவதற்கு ஏதுவாகும்.

டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களின விவசாயப் பணிகளை ஊக்குவிக்கின்ற வகையிலே ஜூன் 12ல் திறந்து காவிரியில் கரைபுரண்டு ஓடும் என விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றுகின்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதோடு நமது பகுதியின் மக்கள் வைத்த கோரிக்கையை முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்து சென்றவுடன் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் இருக்க வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் 25.05.2020 பிற்பகல் முதல் 28.05.2020 முற்பகல் வரை தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது. மக்களின் தாகம் தீர்ப்பதற்காக, நிலத்தடி நீர் உயர்வதற்காக ஒரு தொலைநோக்கு பார்வையோடு இந்த அறிவிப்பை கொடுத்திருக்கிறார்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மதியழகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புசெல்வன், உதவி செயற் பொறியாளர் லீலாவதி, உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், உதவிப் பொறியாளர்கள் பாண்டியன், ராதாகிருஷ்ணன், லட்சுமணன், வட்டாட்சியர் சாந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.