தற்போதைய செய்திகள்

ரூ.95 லட்சம் மதிப்பில் தங்கும் விடுதி – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், சுற்றுலாத் துறை சார்பில் தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், குச்சனூர் பேரூராட்சி, சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிக் கட்டடம் மற்றும் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் பகுதியில் சுரபி நதிக்கரையின் படித்துறை வாய்க்காலில் 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தளம் மற்றும் சிமெண்ட் பேவர்பிளாக் கல் கட்டுமானம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மக்களின் மன மகிழ்வுக்கு மூலக் கூறாகவும், வேலைவாய்ப்பினையும், அன்னியச் செலாவணியையும் ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகித்து வரும் சுற்றுலாவை மேம்படுத்துதல், தொடர்ந்து அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு புதிய சுற்றுலா மையங்களை தேர்வு செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அம்மா அவர்களின் வழியில் செயல்படும் அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், குச்சனூர் பேரூராட்சி, சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் தரை மற்றும் முதல் தளத்துடன், 6,900 சதுர அடி பரப்பளவில், 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிக் கட்டடம் மற்றும் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் பகுதியில், சுரபி நதிக்கரையின் படித்துறை வாய்க்காலில், 176 சதுர மீட்டர் பரப்பளவில் 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தளம் மற்றும் சிமெண்ட் பேவர்பிளாக் கல் கட்டுமானம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், சுற்றுலாத் துறை ஆணையர் டி.பி.ராஜேஷ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.