தற்போதைய செய்திகள்

தி.மு.க.வுக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகி விட்டனர் – முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி பேட்டி

அம்பத்தூர்

பேரிடர் காலத்தில் கழகத்தினர் ஆற்றிவரும் சேவையை கண்டு, சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு முடிவுரை எழுத தமிழக மக்கள் தயாராகி விட்டனர் என்று முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி கூறினார்

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க மாதவரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி ஏற்பாட்டில்
அப்பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சுகாதாரப்பணியாளர்கள், உட்பட 15000க்கும் மேற்பட்டோருக்கு அரிசி பருப்பு காய்கறி சர்க்கரை முகக்கவசம் கிருமிநாசினி அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று மாதவரம் பகுதி 26-வது வட்டத்தில் வட்டக்கழக செயலாளர் ஜே.காமேஷ் ஏற்பாட்டில் பொன்னியம்மன்மேடு பகுதிகளில் ஏழை எளியோர் 1000 நபர்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய், உப்பு சோப்பு மளிகை சாமான்கள் தொகுப்பு, ஆகியவை வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் தனக்கு பின்னாலும் இந்த கழகம் நூறு ஆண்டுகள் தழைத்தோங்கும் என்று கூறினார். அதேபோன்று அம்மாவின் மறைவிற்குப் பின் இன்று இந்த ஆட்சியும் கட்சியும் கழகத்தின் கடைக்கோடி தொண்டனையும் எந்த ஒரு
சூழ்நிலைகளிலும் கழகத்தை தாங்கிப் பிடிக்கும் ஆலமரமாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கழக ஆட்சி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்த ஆட்சி இன்று போய்விடும். இதோ நாளை போய்விடும் என்று கூறியவர்கள் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிட்டனர். இந்த பேரிடர் காலத்தில் கழகம் சார்பில் மக்களுக்கு ஆற்றிய சேவையை மக்கள் நினைத்து வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு முடிவுரை எழுத தயாராகி விட்டனர் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாதவரம் பகுதி கழக செயலாளரும், முன்னாள் மண்டல குழு தலைவருமான டி.வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நீண்ட வரிசையில் நின்று பொதுமக்களிடம் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி நலம் விசாரித்து அவர்களுக்கு முக கவசம் மற்றும் கைகளில் கிருமி நாசினி ஆகியவற்றையும் வழங்கினார்.