தற்போதைய செய்திகள்

கொரோனோ நோயாளிகளுக்கு உதவ ரோபோக்கள்- அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி இயக்கி வைத்தார்

திருநெல்வேலி

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதியில் ரோபோக்களை அர்ப்பணித்து அவற்றை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதியில் நோயாளிகளுக்கு உதவும் வகையில் ரோபோக்களை வழங்கும் நிகழ்ச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலதுறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.

அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார்.

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரையறுக்கப்பட்ட கொரோனா மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு 50 நாட்கள் ஆகிறது. தற்பொழுது 192 கொரோனா உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் திருச்சி ப்ரொபெல்லர் டெக்னாலஜி என்கிற அமைப்பு 3.2 கிலோ எடை உடைய ரோபோக்களை தயார் செய்து வருகிறது.

இந்த அமைப்பினுடைய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட ‘சபிகோ” எனும் பல்வகை பணிகளை செய்யகூடிய ரோபோ மூலம் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நோயாளிகளுக்கு மருத்துவ பணியாளர்கள் அருகில் சென்று பொருட்களை வழங்குவதற்கு பதிலாக இதன் மூலம் உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் வழங்கிட எதுவாக இருக்கும்.

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சென்னை, திருச்சி, தஞ்சை, தேனி மற்றும் மதுரை மருத்துவ கல்லூரிகளுக்கு ரொபோக்களை வழங்கி உள்ளது. அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 2 ரோபோக்களை வழங்கி உள்ளது.

இந்த ரோபோவின் உதவியுடன் மருத்துவர்களும் மற்றும் பணியாளர்களும் நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் நெருங்கி சென்று செயல்படாமல் தூரத்திலிருந்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவபொருட்கள் வழங்க முடியும். மருத்துவர்களும், செவிலியர்களும் நோயாளிகளிடம் பேசி வருவதற்கான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தொகுதி நாங்குநேரி சட்ட மன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேச ராஜா, ஆவின் தலைவர் சுதா பரமசிவம், மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.