தற்போதைய செய்திகள்

நவீன சேமிப்பு கிடங்குகள்,வங்கி கிளை அலுவலகக் கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், குடவாசலில் 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 25,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு நவீன சேமிப்புக் கிடங்கினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், 21 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகள், தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய அலுவலகத்தில் கூடுதல் தளங்கள், கூட்டுறவு வங்கி கிளை அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அம்மா அவர்கள் கடந்த 6.5.2013 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், உணவு பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை முறையாக சேமித்து வைக்கும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக புதிதாக 4,33,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 47 சேமிப்புக் கிடங்குகள் கட்டப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், குடவாசலில் 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 25,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு நவீன சேமிப்புக் கிடங்கினை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

முதலமைச்சர் கடந்த 19.6.2017 அன்று சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக 9 மாவட்டங்களில், 14 சொந்த இடங்களில் 30,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் கிடங்குகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பஞ்செட்டி கிராமத்தில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 750 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு சேமிப்புக் கிடங்கு; வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், பாக்கம் கிராமத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தலா 750 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு சேமிப்புக் கிடங்குகள் மற்றும் காட்பாடி வட்டம், குகையநல்லூர் கிராமத்தில் 4 கோடியே

95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தலா 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு சேமிப்புக் கிடங்குகள், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், குனிச்சி கிராமத்தில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தலா 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு சேமிப்புக் கிடங்குகள், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூர் கிராமத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு சேமிப்புக் கிடங்கு,

மேலும், தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தில் 4 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தலா 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 சேமிப்புக் கிடங்குகள், கூட்டுறவுத் துறை சார்பில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புவனகிரி கிளைக்கு 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வங்கி கிளை அலுவலகக் கட்டடம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஒண்டிப்புதூர் புதிய கிளைக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வங்கி கிளை அலுவலகக் கட்டடம்,

சென்னை மாவட்டம், பூங்கா நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், சென்னை (வடக்கு) மற்றும் சென்னை (தெற்கு) ஆகிய அலுவலகங்கள் அனைத்தும் ஒரே கட்டடத்தில் செயல்படுவதால் இங்கு பணிபுரியும் பணியாளர்கள், வருகை தரும் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, 6024.60 சதுர அடி பரப்பளவில், 1 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3-வது தளத்தின் பகுதிக் கட்டடம் மற்றும் 4வது தளம் ஆகிய கூடுதல் கட்டடங்கள்,

என மொத்தம் 67 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 13 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் 5 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலைகளில் காலியாக உள்ள 10 முறைப் பொறியாளர்கள் மற்றும் தரக்கட்டுப்பாடு பிரிவில் காலியாக உள்ள 7 உதவி மேலாளர்கள் (தரக் கட்டுப்பாடு) பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக,முதலமைச்சர் 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ச. தமிழ்வாணன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சுதாதேவி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர். சவான், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் இல. சுப்பிரமணியன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.