தற்போதைய செய்திகள்

நரிப்பள்ளி அணைக்கட்டில் குடிமராமத்து பணி – அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

தருமபுரி

தருமபுரி மாவட்டம் நரிப்பள்ளி அணைக்கட்டில் குடிமராமத்து பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வெங்கடராமபுரம் கிராமத்தில் நரிப்பள்ளி அணைக்கட்டில் ரூ.94 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணி மற்றும் கடகத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.20 கோடி மதிப்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கு உணவுடன் கூடிய தங்கும் விடுதி கட்டடம் கட்டும் பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி, தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வெங்கடராமபுரம் கிராமத்தில் நரிப்பள்ளி அணைக்கட்டில் ரூ.94 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டு கோவிலாறு கல்லாறு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இது பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த அணைக்கட்டின் நீளம் 64 மீட்டர் ஆகும். பாசன கால்வாயின் நீளம் சுமார் 4600 மீட்டர் ஆகும்.

இந்த அணைக்கட்டின் முதன்மைச் சுவரில் உள்ள கசிவுகளை சீர்செய்தல். கெட்டித்தளத்தில் உள்ள சிதைவு மற்றும் குழிகளை சீர் செய்தல். முதன்மைச் சுவரில் உள்ள உடைப்புகளை சீர் செய்தல். அடிச்சுவர் அமைத்து அணைக்கட்டில் உள்ள கசிவுகளை சீர் செய்தல். பாசனக் கால்வாய்களை தூர்வாரி தேவையான இடங்களில் கான்கிரீட் கால்வாய்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அணைக்கட்டின் பணிகள் முழு ஆயக்கட்டு பகுதி மற்றும் அருகில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கும். இந்த அணைக்கட்டின் மூலம் 300 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.

தருமபுரி மாவட்டம், கடகத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் கடகத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கு உணவுடன் கூடிய தங்கும் விடுதி கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இக்கட்டடம் தரைதளம் 443 சதுர மீட்டர் பரப்பளவிலும், முதலாவது தளம் 426 சதுர மீட்டர், இரண்டாம் தளம் 426 சதுர மீட்டர் என மொத்தம் 1295 சதுர மீட்டரில் அமைக்கப்படவுள்ளது. இப்பணிகள் 12 மாதங்களில் நிறைவுபெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.