தற்போதைய செய்திகள்

திருப்பூர் மாவட்டம் விரைவில் பச்சை மண்டலமாக மாறவுள்ளது- அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் விரைவில் பச்சை மண்டலமாக மாறவுள்ளது என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய குமாரபாளையம் பகுதியில் பொதுப்பணித்துறை – நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டப் பணிகள் 2016-2017-ம் ஆண்டு முதல் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ஆழியாறு வடிநிலக் கோட்டத்தின் வாயிலாக 54 பணிகள் ரூ.501.80 லட்சம் மதிப்பீட்டிலும், திருமூர்த்திக் கோட்டத்தின் வாயிலாக 45 பணிகள் ரூ.447.94 லட்சம் மதிப்பீட்டிலும், பவானி வடிநிலக் கோட்டத்தின் வாயிலாக 6 பணிகள் ரூ.88.10 லட்சம் மதிப்பீட்டிலும், பழனி குதிரையாறு வடிநில கோட்டத்தின் வாயிலாக 1 பணி ரூ.25 லட்சம் மதிப்பிட்டிலும், அமராவதி வடிநிலக் கோட்டத்தின் வாயிலாக 26 பணிகள் ரூ.330.41 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் நடப்பாண்டில் 132 பணிகள் ரூ.13.93 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், காங்கேயம் ஆகிய வட்டங்களில் உள்ள சுமார் 1,29,336.559 ஹெக்ேடர் பாசன நிலங்கள் பயன்பெற உள்ளன. மேலும், பொதுப்பணித்துறை – நீர்வள ஆதாரத்துறை மூலம் பதிவு பெற்ற பாசன சங்கங்கள் (அல்லது) நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் (அல்லது) பாசனதாரர்கள் தொகுப்பு வாயிலாக பணிகளை செயல்படுத்திட அரசு உரிய வழிமுறைகள் வழங்கியுள்ளது. இத்தகைய பணியின் காரணமாக விவசாய பெருங்குடி மக்களுக்கு தங்குதடையின்றி நீர் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும். மேலும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தை சேர்ந்த திருமூர்த்தி கோட்டம் மற்றும் ஆழியார் வடிநில கோட்டம் கீழ் 19 கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்களுக்கு ரூ.202.50 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக அரசு சார்பில் 90 சதவீதமும் மற்றும் பாசனதாரர்கள் சங்கத்தின் சார்பில் 10 சதவீத பங்களிப்பு நிதியுடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்மூலமாக விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான குழாய் சீரமைத்தல், மதகு, டிராப் போன்ற குறுக்கு கட்டுமானங்களை சீரமைத்தல், நீரிழப்பினை தடுக்க கான்கிரீட் லைனிங் அமைத்தல் மற்றும் கால்வாய்களில் பாசன நீர் தங்குதடையின்றி கொண்டு செல்ல சுமார் 168 கி.மீ நீளத்திற்கு முட்புதர்கள், மண்திட்டுகள் அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகள் மூலமாக சுமார் 46440.00 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன. இப்பணிகளை 2 மாத காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் மேலான அறிவுரையின் படி, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், கடந்த மே 2ம் தேதி முதல் சுமார் 23 நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் புதிய கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏதும் இல்லை. இதனால் திருப்பூர் மாவட்டம் விரைவில் பச்சை மண்டலமாக மாறவுள்ளது. அரசின் விதிகளை பொதுமக்கள் முழுமையாக பின்பற்றி முகக்கவசங்களை அணிந்து கொண்டும், சமூக இடைவெளியினை முழுமையாக பின்பற்றி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பினையும் வழங்கி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் சத்தியபாமா, பரம்பிக்குளம் ஆழியாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி, திருமூர்த்தி கோட்ட செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி (பொள்ளாச்சி), உதவி பொறியாளர்கள் ஆதிசிவன், சிங்காரவேல், குண்டடம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் குப்புசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சிவபாலன், தாராபுரம் வட்டாட்சியர் கனகராஜ், குண்டடம் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் அய்யாசாமி, கலைச்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.