தற்போதைய செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் 679 மகளிர் குழுக்களுக்கு ரூ. 9.4 கோடி கடன் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் தடை உத்தரவு காலத்தில் மட்டும் 679 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 9 கோடியே 4 லட்சம் வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கொரோனா சிறப்பு கடன், நேரடி வங்கிக்கடன் மற்றும் உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகனங்களை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.ஆனந்த் தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் அம்மா தந்த திட்டங்களை அதாவது விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் உட்பட அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். மேலும் உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முன்னெச்செரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு திறம்பட செயலாற்றி வருகிறது.

அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்தல், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000 நிதியுதவி வழங்குதல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்குதல், குறைந்த விலையில் நடமாடும் காய்கறி கடைகள், அம்மா உணவகங்கள் மூலம் இலவசமாக உணவு வழங்குதல் மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் உயிரிழப்பு 0.06 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களே பாராட்டுகின்ற வகையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு தெரிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருந்தால் கொரோனோ நோய் தொற்று கண்டு அச்சமடைய தேவையில்லை.

மேலும் தளர்வுகளுடன் கூடிய 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கொரோனா சிறப்புக்கடன் திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் நபர் ஒருவருக்கு ரூ.5000 வீதம் வங்கிக்கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் இன்று வரை 367 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2 கோடியே 37 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 312 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 6 கோடியே 67 லட்சம் நேரடி வங்கிக்கடனும் வழங்கப்பட்டுள்ளது. ஆக தடை உத்தரவு காலத்தில் மட்டும் 679 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 9 கோடியே 4 லட்சம் வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 8827 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும் இன்றைய தினம் 216 உழைக்கும் மகளிருக்கு ரூ.54.00 லட்சம் மானியத்தொகையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. நமது திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 2017-18 மற்றும் 2018-19 ஆம் நிதியாண்டுகளில் 3558 உழைக்கும் மகளிருக்கு ரூபாய் 8 கோடியே 88 லட்சம் மானியத்தொகை அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது. மகளிர்களுக்காக தமிழக அரசு தீட்டிவரும் அனைத்து திட்டங்களை முறையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல் கிசோர், முதுநிலை மண்டல மேலாளர், த.மணிவண்ணன், மகளிர் திட்ட திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.