தற்போதைய செய்திகள்

திக்கற்று இருந்த எங்களை காப்பாற்றியது அம்மா அரசு – முதல்வர், துணை முதல்வருக்கு நத்தம் தொகுதி மக்கள் நன்றி

திண்டுக்கல்

நத்தம் சட்டமன்ற தொகுதியில் கழக அமைப்புச் செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் வழங்கிய நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட மக்கள் எங்கள் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ, எம்.பியை காணவில்லை. திக்கற்று இருந்த எங்களை காப்பாற்றியது அம்மா அரசு என்றும் கூறியதோடு முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

முதல்வர், துணை முதல்வர் உத்தரவிற்கு இணங்க திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 97, 324 குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆட்டோ ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக நிவாரண பொருட்களை கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன் வழங்கினார்.

தொகுதிக்கு உட்பட்ட அனைத்து முடிதிருத்தும் தொழிலாளிகள், அனைத்து சலவை தொழிலாளர்களுக்கும், தலா 10 கிலோ அரிசி, 1கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய், 1கிலோ ஜீனி, 1 சோப்பு, கிருமிநாசினி உள்ளிட்ட தொகுப்புகளை அவரவர்கள் இருப்பிடத்திற்கு சென்று வழங்கினார். தொகுதிக்குட்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தலா 10 கிலோ அரிசி வீதம் வழங்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரண பொருட்கள் நேரில் சென்று அடையும் வண்ணம் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் மேற்பார்வையில் வழங்கப்பட்டது.

இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாநில பேரவை இணை செயலாளர், ஆர்.வி.என்.கண்ணன், நத்தம் ஒன்றிய கழக செயலாளர் ஷாஜகான், சாணார்பட்டி ஒன்றிய கழக செயலாளர் இராமராசு, திண்டுக்கல் ஒன்றிய கழக செயலாளர் ஜெயசீலன், நத்தம் நகர செயலாளர் சிவலிங்கம், சந்திரா கோபாலகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் திருமாறன், மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

அடியனூத்து பகுதியில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் நிவாரண பொருட்களை வழங்கினார். மகிழ்வுடன் பெற்றுக் கொண்ட அடியனூத்து பாப்பாத்தி (75) என்பவர் கூறுகையில், இந்த நோய் வந்த பிறகு சாப்பாட்டிற்கு கூட சிரமப்பட்டு கொண்டிருந்தோம். ரேஷன் கடையில் அரிசி பொருட்களை முதல்வர் வழங்கினார். மேலும் முன்னாள் அமைச்சர் விசுவநாதன் எங்களுக்கு வேண்டிய பொருட்களையும் வழங்கி உள்ளார்.

திக்கற்று இருந்த எங்களை காப்பாற்றியது அம்மா அரசு தான். ஆனால், எங்க தொகுதி திமுக எம்எல்ஏ வையும் காணோம், எம்.பி.யையும் காணோம். எங்களுக்கு என்றென்றும் துணை நிற்கும் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், நிவாரண பொருட்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் விசுவநாதனும் நல்லா இருக்கணும் என்று கண்ணில் நீர் பெருக உணர்ச்சி பெருமிதத்துடன் கூறினார்.