தமிழகம்

விலையில்லா பொருட்கள் வழங்க ஜூன் 5ம்தேதி நியாயவிலைக்கடை செயல்படும் – உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு

சென்னை

விலையில்லா அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஜூன் 5ம்தேதி நியாயவிலைக்கடை செயல்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஜூன் மாதத்திற்கு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதனைச் செயல்படுத்தும் வகையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

அத்தியாவசிய பொருட்களை குடும்பஅட்டைதாரர்கள் பெற நாள் ஒன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு,வழங்கும் நாள், நேரம்,போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு டோக்கன்கள் வரும் 29 மற்றும் 30 ,31ம் தேதி ஆகிய மூன்று தினங்களில் வீடுதோறும் சென்று நியாயவிலைக்கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும்.

மேலும் அட்டைதாரர்கள் டோக்கன்களில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே பொருட்கள் வாங்க வரவேண்டும் என்று டோக்கனில் குறிப்பிடப்படாத நேரத்தில் பொருட்கள் வழங்கப்படாது என்பதையும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கும் போது தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் வாங்க வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்படவேண்டும்.

காவல்துறையின் மூலம், டோக்கனில் குறிப்பிடப்பட நாள் மற்றும் நேரத் தில் மட்டுமே பொருட்கள் வாங்க வரவேண்டும் என்பதை அந்தந்த பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.அவ்வாறு அட்டவணை தயாரிக்கும்பொழுது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் குடியிருப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

ஜூன் 2020 மாத அத்தியாவசிய பொருட்கள் 1.6.2020 தேதியிலிருந்து குடும்ப அட்டைதாரர்களுக்குத் தகுதியான அளவின்படி அனைத்து பொருட்களும் முழு அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை விலையின்றி விநியோகிக்கப்பட வேண்டும். மேலும் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள நியாயவிலைக்கடைகளில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு கூடுதலாக ஒரு நபர் நியமிக்கப்பட வேண்டும்.

கூடுதல் பணியாளர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.டோக்கனில் குறிப்பிட்டுள்ளபடி பொருட்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது உரிம அளவின்படி பொருட்களை விநியோகம் செய்ய ஆகும் நேரத்தைக் குறைக்கும் வகையில் முன்கூட்டியே அத்தியாவசியப் பொருட்களை ( அரிசி,சர்க்கரை,பாமாயில் மற்றும் துவரம் பருப்பு) ஒரு தொகுப்பாகத் தயார் நிலையில் வைத்து விநியோகம் செய்ய வேண்டும்.

பொருட்களைப் பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் தனிமைப்படுத்தி வாங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.இந்த அறிவுரை தவறாமல் பின்பற்றப்படவேண்டும்.தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் இடங்களுக்குத் தேவையான பாதுகாப்புடன் நேரில் சென்று பொருட்கள் வழங்கப்படவேண்டும்.அதுபோன்றே மிகவும் வயதானவர்கள் நேரில் வந்து பொருட்களை நியாயவிலைக்கடைகளில் பெற்றுச்செல்ல இயலாதவர்களுக்கும் நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படவேண்டும்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள இடங்களுக்கு செல்லும்போதும் ,கையுறை,முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி ஆகியவைகளை பயன்படுத்திப் பாதுகாப்பான முறையில் சென்று பொருட்கள் வழங்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.நியாயவிலைக்கடைகளுக்கு 5.6.2020 அன்று முதல் வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறை தினமாகும்.ஆனால் அன்றைய தினம் நியாயவிலைக்கடைகளுக்கு பணிநாளாகவும், அதற்குப் பதிலாக 19.6.2020 அன்று வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகவும் அறிவித்து ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.