தற்போதைய செய்திகள்

கபசுர நீரை குடிப்பதால் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

கபசுர குடிநீரை குடிப்பதால் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் செய்யும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் ராயபுரம் மண்டலத்தில் வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதில், சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க சென்னை சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மக்கள் அடர்த்தியாக வாழ்கிறார்கள். ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 5,600 முதல் 6 ஆயிரம் பேர் வரை வாழ்கின்றனர். ஆனால், சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 500 முதல் 700 பேர் தான் வாழ்கின்றனர். இதனால் தான் சென்னையில் கொரோனா பரவலைத் தடுப்பது மிகவும் சவாலாக உள்ளது.

சென்னையில் குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மறு சுழற்சியில் உபயோகிக்கும் வகையில் முகக் கவசங்கள், வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு இதுவரை 16 லட்சம் முகக் கவசங்கள் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் அதிகம் பாதிப்புக்குள்ளான ராயபுரம் மண்டலத்தில் தெருக்களில் ஆட்டோவின் மூலம் சென்று கபசுரக்குடிநீர், ஹோமியோபதி மருந்துகள் உள்ளிட்டவற்றை கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் டி.ெஜயக்குமார் தெரிவித்தார்.

இதன் பின்பு பேசிய கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், சென்னையில் ஒரு கோடி மக்கள் இருக்கிறார்கள். மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை இருப்பதால் பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஒரு தெருவில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் போது அந்த தெருவில் உள்ள அனைவரையும் தனியாக தங்க வைத்து முழு பரிசோதனை செய்யப்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை தனியாக தங்க வைக்க மாநகராட்சி சார்பில் மூன்று மருத்துவமனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் பொதுவெளியில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கைகளை கழுவ வேண்டும். முதியோருக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை இருந்தால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இதைப் பெரும்பாலும் யாரும் செய்யாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றார்.