தற்போதைய செய்திகள்

சட்டத்தை மதிக்காமல் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி சென்றுள்ளார் – அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை

சட்டத்தை மதிக்காமல் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி சென்றுள்ளார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.

சென்னை ராயபுரம் மண்டலத்திலுள்ள தம்புசெட்டி தெரு பகுதிகளில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாமை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.

முன்னதாக திருநங்கைகள் இணைந்து கொரோனா வைரஸிற்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் தகுந்த இடைவெளியை பின்பற்றியும் விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து அமைச்சர் டி.ஜெயக்குமார் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

ராயபுரம் மண்டலத்தில் தினமும் நான்காயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மக்களுக்கு தேவையான சிகிச்சைகள் உடனடியாக அளிக்கப்படுகிறது. மக்கள் தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிவது, தேவையின்றி வெளியே செல்லாமல் இருப்பது மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். மக்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா இல்லாத மாநிலமாக மாற முடியும்.

சென்னையில் உள்ள இரண்டாயிரம் குடிசைப் பகுதிகளில் மைக்ரோ திட்ட அடிப்படையில் தீவிர கண்காணிப்பு செய்து வருகிறோம். மாத்திரை மூலமாகவும், உணவு மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.நமக்கு பிரச்னை வரக்கூடாது. நம்மால் மற்றவருக்கு பிரச்னை வரக்கூடாது என்ற எண்ணத்திலேயே ஐந்து நாள்கள் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.

கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, கொரோனா தொற்று இல்லை என்று உறுதியான பின்புதான் வெளியே வர ஆரம்பித்தேன். உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி செல்வதற்கு சென்னையிலும் தூத்துக்குடியிலும் எந்த அனுமதியும் பெறாமல் சட்டத்தை மதிக்காமல் சென்றுள்ளார் இதற்கான விளக்கத்தை அவர் தர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா, பகுதி செயலாளர் கன்னியப்பன் வழக்கறிஞர் ஆர்.ஜோதி மண்டலம் 5 அதிகாரி ராம் பிரிதிபன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் ஆகியோர் இருந்தனர்.