தற்போதைய செய்திகள்

அரசுக்கு ஆலோனை வழங்குவதற்கு முன்னர் அவர் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் – ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை

சென்னை:

படதிறப்பு நிகழ்ச்சியில் முககசவம் இல்லாமல் பங்கேற்கலாமா என்றும் அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முன்னர் அவர் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பின் ஒரு பகுதியாக சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா தொற்று கண்டறியும் வாரம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆரம்ப நிலையில் நோய் தொற்று கண்டறியும் காரணத்தினால் குணமடைவோரின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. இறப்பு சதவீதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. இதனை கட்டுக்குள் வைத்திருக்கிறோம். இருந்தாலும் அது நமக்கு கவலை அளிப்பதாக உள்ளது. நோய் தொற்றில் பலியானவர்களில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற இணை நோய்களால் அவர்கள் அவதியுறும் போது இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிட்டால், அவர்களை காப்பாற்றுவது மிக சவாலாக உள்ளது. இறப்பு விகிதத்தை நாம் ஜீரோ அளவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மருந்தே இல்லாத இந்த நோய் தொற்றை குணப்படுத்துவதில் இருக்கின்ற சவால்களை எதிர்கொண்டு, நாம் இறப்பு விகிதத்தை குறைத்து சாதனையை படைத்து வருகிறோம். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, இணை நோய் இல்லாதவர்களை நாம் கணக்கெடுத்து பார்த்தால் 15 சதவீதமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே முதலமைச்சர் இணை நோய்கள் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆரம்ப நிலையிலே சிகிச்சை அளிப்பதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதின் அடிப்படையில் இந்த திருவொற்றியூர் மண்டலத்தில் ஏறத்தாழ 95 ஆயிரம் குடியிருப்புகள் கண்டறியப்பட்டு அதில் 15 ஆயிரம் பேருக்கு இந்த இணை நோய்கள் இருக்கும் புள்ளி விபரத்தின் அடிப்படையில், இந்த சிறப்பு மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் படத்திறப்பின் போது முகக்கவசம் அணியாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முன்னதாக அவர் முன்னுதாரணமாக பொறுப்பாக இருக்க வேண்டும். அதன் பின்னர் அவர் ஆலோசனைகளை வழங்கட்டும். ஆண்டுதோறும் தேசிய பேரிடர் நிவாரணம் மூலம் 1310 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வரவேண்டிய தொகை. அதில் 510 கோடி ரூபாய் முதற்கட்டமாக வந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக 9000 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது போல சிறுக சிறுக பல்வேறு நிவாரணங்களுக்காக தமிழகத்திற்கு நிதி வழங்கி வருவது உண்மை தான். ஆனால் அது போதுமானதாக இல்லை. தமிழகத்திற்கு கூடுதல் நிதி வேண்டும். மத்திய அரசு வழங்கி இருக்கும் தொகை கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு போதுமானதாக இல்லை. ஆகையால் கணிவுடன் தாயுள்ளம் கொண்டு கூடுதல் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சிறப்பு கவனம் செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கைகளை பேரிடர் மேலாண்மைத்துறை எடுத்து வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது.

மின் தேவைக்காக மருத்துவமனைக்கென தனியாக துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடம் எழுப்புவதற்கான பணிகள் முழு ஆயத்தமாக நடைபெற்று வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் மாவட்டங்களுக்கு இடையே தொழில் ரீதியான பயணம் மேற்கொள்வதற்கு இ-பாஸ் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு ஆய்வு செய்து அது குறித்த முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து எண்ணூர் பகுதியில் சர்க்கரை நோய் இதய நோய் ரத்த அழுத்தம் சிறுநீரகக் கோளாறு உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்திடும் வகையில் திருவொற்றியூர் மண்டலத்தில் மூன்று இடங்களில் ஒரு வாரம் முழுவதும் நடைபெறவுள்ள மருத்துவ முகாமினை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அதிகாரி ஜான் டாம் வர்கீஸ், மண்டல அலுவலர் பால் தங்கதுரை, காவல்துறை அதிகாரி ஆதிமூலம், மாவட்ட செயலாளர் பி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன், கழக நிர்வாகிகள் கிருஷ்ணன், செல்வம், முன்னாள் நகராட்சி தலைவர் முருகவேல் மணிக்குமார் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.