தற்போதைய செய்திகள்

300 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

மதுரை

மதுரை உலக தமிழ்சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் 300 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரணப் பொருட்களை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்ததாவது:-

உழைக்கும் வர்க்கத்தினுடைய அடையாளமாக இருக்கின்ற தொழிலாளர் தோழர்களையெல்லாம் இந்த சவாலான நேரத்தில் ஏறத்தாழ 55 நாட்களுக்கு மேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை எதிர்கொள்வதில் ஏற்படும் சவால்கள், நாம் அன்றாடம் ஆற்றுகின்ற பணியிலே 144 தடை உத்தரவினால் ஏற்படும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டோம். உங்களை சிரமப்படுத்துவதற்காக இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் 220 நாடுகள் முழுவதிலும் கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் இருந்தது. மனித உயிரை காப்பாற்றுகின்ற கடமையிலே 220 நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் நம் தாய் தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கின்ற வகையில் முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்,

தமிழ்நாட்டிலே பொது விநியோக திட்டத்தின் மூலமாக 2 கோடியே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விலையின்றி மார்ச் 2020 முதல் ஜூன் 2020 வரை அவர்களுடைய இல்லங்களுக்கே கொண்டு சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார் முதலமைச்சர். மதுரை மாவட்டத்தில் இரவும், பகலும் அனைத்துவித விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற நிகழ்ச்சிகள்,

நோய் தடுப்பு நடவடிக்கைகள், குறிப்பாக மருத்துவத்துறைக்கு தேவையான ஆலோசனைகளை முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி எடுத்துரைத்து நோய் தொற்று ஏற்பட்டோருக்கு உயர்தர சிகிச்சை அளிப்பது, நிவாரண நடவடிக்கைகளை அரசு சார்பிலும், தன்னார்வலர்கள் சார்பிலும் ஒருங்கிணைத்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது, அரசு அறிவித்த தளர்வுகளை முறையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளனர்,

ஆட்டோ ஓட்டுநர்களாகிய நீங்கள் உன்னதமான பணியினை மேற்கொண்டு வருகிறீர்கள். உங்களுக்கு சில தளர்வுகளுடன் முதலமைச்சர் உங்களது சிரமத்தினை கருத்தில் கொண்டு ஆட்டோக்களை இயக்குவதற்கு தற்போது அனுமதி வழங்கியுள்ளார். நீங்கள் அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கிருமிநாசினி மற்றும் சோப்பினால் சுத்தம் செய்ய வேண்டும்.

நீங்கள் மட்டும் முககவசம் அணிந்தால் போதாது. உங்களது பயணிகளையும் கண்டிப்பாக முக கவசம் அணிய நீங்கள் வலியுறுத்த வேண்டும். ஒவ்வொரு பயணம் முடிந்தவுடன் ஆட்டோவின் இருக்கைகளை பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். வீட்டிலும் குடும்பத்தினரிடமிருந்து குறைந்த பட்சம் 6 அடி தூரம் இடைவெளி கடைபிடித்து தங்களையும் தங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், கிழக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.