சிறப்பு செய்திகள்

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணம் – முதலமைச்சர் இரங்கல்

சென்னை

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உடல்நலக் குறைவால் 26.5.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.ஆறுமுகன் தொண்டமான் பல ஆண்டுகளாக இலங்கை அமைச்சராக திறம்பட பணியாற்றியவர். இவர் இந்திய வம்சாவளி சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் மட்டுமின்றி, இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.

ஆறுமுகன் தொண்டமான் மறைவு இலங்கை மக்களுக்கும், அந்நாட்டிற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினருக்கும், இலங்கை மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் அந்த இரங்கல் செய்தியில் கூறி உள்ளார்.