தற்போதைய செய்திகள்

பெரியாம்பட்டியில் அம்மா இ-கிராமம் திட்ட அலுவலகம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்

தர்மபுரி

தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் அம்மா இ-கிராமம் திட்ட அலுவலகத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் அம்மா இ-கிராமம் திட்ட செயலாக்கம் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெரியாம்பட்டி கிராமத்தில் அம்மா இ-கிராமம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சரால் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டி கிராமத்தில் அம்மா இ-கிராமம் திட்டம் நேற்று முதல் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், டெலி மெடிசன், இருப்பிட சான்று, சாதி சான்று, இளைஞர் திறன் பயிற்சி, வங்கி சேவை, பட்டா சிட்டா இணையதள வழியாக மின்வாரிய கட்டணம் செலுத்துதல், இ-டிக்கெட் புக் செய்தல், இ- பணபரிமாற்றம், பிறப்பு இறப்பு சான்று, ஆதார் பிரிண்ட் போன்ற பல வகையான சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக இந்த அம்மா இ-கிராமம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, தருமபுரி கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் பொன்னுவேல், காரிமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் ரவிசங்கர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் செல்வராஜ், வட்டாட்சியர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.