தற்போதைய செய்திகள்

ரூ. 81 லட்சம் மதிப்பீட்டில் மதுரை உத்தங்குடி கண்மாயில் குடிமராமத்து பணி – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

மதுரை

மதுரை உத்தங்குடி கண்மாயில் ரூ. 81 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகளை மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா துவக்கி வைத்தார்

தமிழக அரசு குடிமராமத்து பணிகள் மூலமாக கண்மாய்களை தூர் வரும் பணியினை தொடர்ச்சியாக செய்து வருகிறது. அதன்படி கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள இந்த சமயத்தில் வெயில் காலம் முடிந்து மழை காலம் வர இருப்பதை யொட்டி மீண்டும் குடிமராமத்து பணியின் மூலமாக கண்மாய்களை தூர் வாரி விவசாய நிலங்களுக்கான நீர் பாசன வசதிகளை உறுதி செய்வது, அந்தந்த பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது, மக்களின் குடிநீர் தேவையை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை உத்தங்குடி கண்மாயில் ரூபாய் 81 லட்சம் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- முதலமைச்சர் எடப்பாடியார் குடிமராமத்து திட்டத்தை உருவாக்கி ,கடந்த இரண்டு ஆண்டுகளில் 421 கோடியிலும், தற்போது இந்த ஆண்டில் 499 கோடியிலும் நிதி ஒதுக்கி, தமிழகத்தின் உள்ள அனைத்து ஏரி ,கண்மாய், குளங்களை தூர்வாரி உத்தரவிட்டு அதன்மூலம் இன்றைக்கு உலகமே வியக்கும் வண்ணம் தமிழகத்தில் நிலத்தடி நீரை உயர்த்தி ஒரு புதிய சகாப்தம் படைத்துள்ளார்

ரூ.930 கோடியில் தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை ஆகிய கட்டுப்பாட்டில் இருக்கும் கண்மாய்களை தூர்வாரியது மூலம் கூடுதலாக தமிழகத்தில் 7 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் செய்யப்பட்டன. இந்த பணிகள் மூலமாக உத்தங்குடி கண்மாய் மூலம் ஆயிரக்கணக்கிலான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும். அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தக்கார் பாண்டி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.