தற்போதைய செய்திகள்

மகளிர் குழுக்களுக்கு ரூ.13.5 லட்சம் கடன் உதவி – தூசி கே.மோகன் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம் திருப்பனங்காடு கிராமத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கொரோனா சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.13.5 லட்சம் கடனுதவியை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றியம் திருப்பனங்காடு கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் கொரோனா சிறப்பு திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் டி.பி.துரை, தலைமை தாங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் பங்கேற்று சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.13.5 லட்சம் கடனுதவி வழங்கினார். மேலும் கறவை மாடுகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ பேசுகையில், கொரோனா வைரஸ் காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதல்வர் ஆணைக்கிணங்க தமிழகமெங்கும் உள்ள மகளிர் குழுக்களுக்கு கொரோனா சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்க உத்தரவிட்டதின் பேரில் செய்யார் பகுதி திருப்பணங்காடு கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கடனுதவி தரப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் தனி நபர்களுக்கு குறைந்த பட்சம் ரூ5000மும், குழுக்களுக்கு ஒருலட்ச ரூபாயும் கடன் வழங்கப் படுகிறது. பெண்கள் கடன்களை பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளவும், மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 159 கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், 4 நகர கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்படுகிறது. அம்மாவின் அரசு பொதுமக்களின் தேவைகளை கண்டறிந்து செயல்படுத்தி வருகிறது. நீங்கள் என்றும் கழக அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றார்.

முன்னதாக கூட்டுறவு சங்க செயலாளர் வரவேற்றார். நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி.ராஜி, பேரவை மாவட்ட செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், பாசறை மாவட்ட செயலாளர் எஸ்.திருமூலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.