தற்போதைய செய்திகள்

மக்களுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் கழக அரசு வழங்குகிறது – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ பேட்டி

அம்பத்தூர்

அம்பத்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ ஓடி ஒளிந்து கொண்டார். ஆனால் அந்த தொகுதி மக்களுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் கழக அரசு வழங்குகிறது என்று வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட கழக செயலாளரும், அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. தினந்தோறும் ஒவ்வொரு வார்டாக சென்று ஏழை எளிய குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் செய்து வருகிறார்.

அந்தவகையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றிய கழகத்திற்குட்பட்ட நல்லூர், வி.பி.சி.நகர், ஆத்தூர், ஒரக்காடு அங்காளம்மன் கோயில் பகுதி ,போன்ற பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறி ஆகிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை ஒன்றிய கழக செயலாளர் பி.கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இதில்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் கலந்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்தவர். ஆனால் மக்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் ஓடி ஒளிந்து விட்டார். ஆனால் இந்த பேரிடர் காலத்தில் மக்களுக்கு அனைத்து நிவாரண பொருட்களும் அம்மா வழியில் நடைபெற்று வரும் கழக அரசு தான் செய்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் இன்று ஒரு புனித ஆட்சியை நடத்திவரும் கழக அரசின் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்திவரும் ஸ்டாலினுக்கு அம்மா அரசின் மீது களங்கம் கற்பிக்க எந்த ஒரு தகுதியும் கிடையாது.

ஊழல் செய்து ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திராவிட முன்னேற்ற கழக ஆட்சி. இது தான் வரலாற்று உண்மை. அதை மறந்து விட்டு இன்று ஸ்டாலின் வட நாட்டுக்காரன் ஆலோசனை பெயரில் பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார் அ.தி.மு.க என்பது பனங்காட்டு நரி. இந்த சலசலப்புகள் எல்லாம் அஞ்சாது. எனவே ஸ்டாலின் அரசுடன் இணைந்து செயல்படவில்லை என்றாலும் பொய் குற்றச்சாட்டுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அலெக்சாண்டர் எம்.எல்.ஏ கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சோழவரம் ஒன்றிய கழக செயலாளர் பி.கார்மேகம், எஸ் மனோகரன், ஜி.ராஜேந்திரன், எஸ்.எம்.ஜி.சீனிவாசன், பி.கே.செல்வம், குணசேகரன், வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.