தற்போதைய செய்திகள்

சேலம் கந்தம்பட்டியில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்

சேலம்

சேலம் மாநகரம் கோவை பைபாசில் ரூ.33 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று மாலை 4.30 மணியளவில் திறந்து வைக்கிறார்.

சேலம் மாநகரில் இருந்து கந்தம்பட்டி வழியாக, இளம்பிள்ளை, சித்தர் கோவில், சிவதாபுரம் போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும். தற்போது கந்தம்பட்டியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, சென்னை, கோவை-திருச்சிக்கு செல்லலாம். கந்தம்பட்டியில் பைபாஸ் சாலை அமைந்ததால் வாகன போக்குவரத்து அதிகமானது.

சேலம் மாநகருக்கு வேலை நிமித்தமாக இளம்பிள்ளை, சிவதாபுரம், சித்தர்கோவில் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்திலும், நடந்து சென்றும் சாலையை கடக்கும் போதும் அதிக விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன. அதே நேரத்தில் சிவதாபுரம், சித்தர் கோவில் செல்ல கந்தம்பட்டி மெயின் ரோட்டின் அருகே உள்ள சிறு பாலத்தின் கீழ் சுமார் 2 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

இதுகுறித்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகர் மாவட்ட செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வெங்கடாஜலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் எடப்பாடியார் கந்தம்பட்டியில் ரூ.33 கோடியில் ஒரு உயர்மட்ட மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கி அவரே வந்து அடிக்கல்லையும் நாட்டினார். மிக விரைவாக நடைபெற்ற பாலம் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.

இதையடுத்து கந்தம்பட்டி மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று மாலை 4.30 மணியளவில் திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் வருகிறார். அங்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.20.20 கோடி மதிப்பீட்டில் ஓசூர் – பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதனை தொடர்ந்து மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு செய்ய உள்ளார். மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்தாய்வு செய்ய உள்ளார்.

பின்னர் சேலம் திரும்பும் அவர் மாலை 4.30 மணிக்கு கந்தம்பட்டி மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சி.அ.ராமன் மற்றும் அதிகாரிகளும், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ மற்றும் கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.