தற்போதைய செய்திகள்

மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவர் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

சென்னை

பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு முன்பு பரிசோதனை செய்ய 15 ஆயிரம் கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் பணிகளை ஆய்வு செய்ய புதிய ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான நிகழ்ச்சியை சென்னை டிபிஐ வளாகத்தில் தொடங்கி வைத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு ஆன்லைன் கல்வியை தடை செய்யவில்லை. ஊக்குவித்து வருகிறது, எனவே ஆன்லைன் பாடம் நடத்த தடை ஏதும் இல்லை. ஆனால் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தக்கூடாது. வீடுகளில் நடத்த எந்த தடையும் விதிக்க முடியாது மாணவர்களை கட்டாயப்படுத்தி கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அவ்வாறு வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படு்ம். தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பல்வேறு பணிகளை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதனால் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. இதுவரையில்லாத வகையில் இந்தியாவிலேயே மிக அதிகமாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 34 ஆயிரம் கோடியை முதல்வர் நிதி ஒதுக்கி உள்ளார் பள்ளிகளில் பாடதிட்டத்தை க்யூ ஆர் கோடு மூலம் மாணவர்களுக்கு போதிப்பது குறித்து புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் இந்தியாவிலேயே மிகச்சிறந்தவர்களாக உருவாக முடியும். அதற்காக ஒத்துழைத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இப்போது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது, இதற்கான 201 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 61 இடங்களில் தான் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இப்போது ஆசிரியர்கள் சமூக இடைவெளியை குறைக்கும் வகையில் விடைத்தாள் திருத்தமையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வால்பாறையில் பேருந்துகள் வரவில்லை என்று குறை கூறப்பட்டது. ஆனால் அங்கு எந்த தடையும் இல்லாமல் காலையில் ஆசிரியர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நோய்த்தொற்று இருப்பதாக எங்கள் கவனத்திற்கு வரவில்லை. மாணவர்களுக்கு எந்த குறைபாடும் இருப்பதற்கான வாய்ப்பில்லை. பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்லும் முன்பு கொரோனா குறித்த ஆய்வு செய்யப்பட்டு தான் அனுப்பப்படுவர். இதற்காக 15 ஆயிரம் மருத்துவ பரிசோதனை கருவிகள் வாங்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி மற்ற மாநிலங்கள் என்ன முடிவெடுக்கிறதோ அதுபற்றி அதன் அடிப்படையில் முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படு்ம்.

மழலையர் பள்ளிகள் பொறுத்தவரை யாருக்கும் பாதிப்பில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்து நிர்ணயிக்க வேண்டிய அதிகாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தான் உள்ளது. இதுகுறித்து 31 ம்தேதிக்குள் முடிவு வெளியாகும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.